பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

இராமலிங்க சுவாமிகள் - இராமாயணம்


இராமகிருஷ்ணரின் பெயரால் வங்காளத்திலுள்ள பேலூரில் ஒரு மடம் அமைக்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில் இம்மடத்தின் கிளைகள் உள்ளன.

வெள்ளம், பஞ்சம், பூகம்பம், கொள்ளை நோய் முதலியவற்றால் துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்வதும், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள், தொழிற்சாலைகள், குருகுலங்கள், கல்விச்சாலைகள் முதலியவற்றை அமைப்பதும் இம்மடத்தின் சிறப்பான நோக்கங்களாகும்.

இராமலிங்க சுவாமிகள் (1823- 1874): இறைவனிடத்தில் மாறாத அன்பு பூண்டு, இனிய தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் இராமலிங்க கவாமிகள். இவர் தென்னார்க்காடு மாவட்டத்தில் மருதூரில் பிறந்தார். இவருடைய தந்தை இராமைய பிள்ளை. தாயார் சின்னம்மையார். இவர் குழந்தையாக இருந்தபோதே இவருடைய பெற்றோர் இறந்துவிட்டனர். இவருடைய தமையனார் இவரை வளர்த்து வந்தார்.

இராமலிங்கருக்கு இளமையில் பள்ளிப்படிப்பில் சிறிதும் நாட்டமில்லை. ஆனால் பாடல்களைப்பாடும் திறமையை இவர் இயற்கையாகப் பெற்றிருந்தார். இராமலிங்கர் நெஞ்சை உருக்கும் பாடல்கள் பல ஆயிரம் பாடினார், இத்தொகுப்பு 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது. "நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பாக இருக்க வேண்டும்; உயிர்க் கொலையும், ஊன் உணவும் கூடாது; நம் உயிர் போல் பிற உயிர்களையும் கருதவேண்டும்; சாதி, குலம், மதம் என்ற வேறுபாடுகள் கூடாது; மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும்" என்று இராமலிங்கர் போதித்து வந்தார்.

படம்; இராமலிங்கர்

இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தரும சாலை ஒன்றை அமைத்தார். அங்கே அன்று இவர் தொடங்கிய அன்னதானம் இன்னும் நடைபெற்று வருகின்றது. இவர் அங்கு சத்திய ஞான சபை என்னும் கோயிலைப் புதுமுறையில் கட்டினார். அதனுள் விளக்கு ஒன்றும், விளக்கின் முன்பு கண்ணாடி ஒன்றும் உள்ளன. அவ்விளக்கின் முன்பு ஏழு திரைகள் உள்ளன. இத்திரைகரை இத்திரைகளை எல்லாம் ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு தோன்றும் விளக்கொளியை ‘அருட்பெருஞ்சோதி' ஆண்டவராகக் கண்டு வழிபட்டு வரும்படி மக்களைச் சுவாமிகள் கேட்டுக்கொண்டார். வடலூரையடுத்த மேட்டுக்குப்பம் (சித்தி வளாகம்) என்ற இடத்தில் 1874 ஜனவரி 30 தைப்பூச நாளன்று இவர் மறைந்தார்.

இராமாயணம்: உலகப் புகழ்பெற்ற பழைய இலக்கியங்கள் இந்தியாவில் பல உண்டு. அவற்றுள் முக்கியமானவை இராமாயணம், மகாபாரதம் (த.க.) ஆகிய இரண்டும் ஆகும். இவற்றை இதிகாசங்கள் அல்லது மகா காவியங்கள் என்று கூறுவார்கள். இவற்றுள் இராமாயணம் காலத்தால் முந்தியது. எனவே இதை ஆதிகாவியம் என்பர்.

இராமாயணத்தை முதன் முதலில் சமஸ்கிருதத்தில் எழுதியவர் வான்மீகி முனிவர். இக்காவியம் செய்யுள் வடிவில் உள்ளது; 24,000 செய்யுள்கள் (சுலோகங்கள்) உடையது.

இராமாயணக் கதையை நீங்கள் எல்லாரும் கேட்டிருப்பீர்கன். அயோத்தியை ஆண்ட தசரதனுக்கு இராமன், பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் என நான்கு புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் இராமனைப் பற்றியே முக்கியமாக இராமாயணம் கூறுகின்றது. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை" என்ற கொள்கையுடையவன் இராமன். தந்தை தசரதன் சொல்லைக் காப்பாற்றுவதற்காகக் கைகேயியின் சொற்படி காடு சென்றான். தன் மனைவி சீதை, தம்பி இலட்சுமணன் ஆகியோருடன் காட்டில் 14 ஆண்டுகள் வாழ்ந்தான். வானர அரசன் சுக்கிரீவன், அவன் அமைச்சன் அனுமன் ஆகியோருடன் நட்புக் கொண்டான். சுக்கிரீவனின் அண்ணன் வாலி தவறு செய்ததனால் அவனைக் கொன்றான். சீதையைக் கவர்ந்து சென்ற இலங்கை மன்னன்-