பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இராமாயணம்

இராவணனை வானர வீரர்களுடன் சென்று கொன்றான். உலகத்தைக் காக்கும் திருமாலின் மனித அவதாரமே இராமன். இவன் மனிதர்களுடன் மனிதனாக வாழ்ந்தான். சுகதுக்கங்களை அனுபவித்தான். தருமத்தைக் கைவிடாமல் கடமைகளை நிறைவேற்றி வழிகாட்டினான். தருமத்திலிருந்து விலகித் தவறு செய்தவர்களை இவன் தண்டித்தான், இராமன் பண்பும் சீரிய குணங்களுமுடைய ஒரு மனிதனாக இராமாயணத்தில் சித்திரிக்கப்படுகிறான்.

இராமனின் மனைவி சீதையும் மிகச்சிறந்த பண்பும் உயர் குணங்களுமுடைய பெண்மணியாக விளங்குகினாள். அவள் அழகுத் தெய்வம்; கற்புக்கு அரசி. கணவனைத் தெய்வமாகக் கொண்டவள். பெண்களுக்கெல்லாம் சிறந்த உதாரணமானவள்.

இராமனின் தம்பிகள் இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகிய மூவரும் அண்ணனிடம் அளவு கடந்த அன்பு கொண்டவர்கள். இலட்சுமணன் தன் அண்ணன் சென்ற இடமெல்லாம் அவன் நிழல்போல் பின்தொடர்ந்தான். இராமனுக்குப் பணிவிடை செய்தான். இராமனும் சீதையும் காட்டில் வாழ்ந்த போது அவர்களைப் பாதுகாத்தான். பரதன் இராமனின் சொல்லைக் கேட்டு அதன்படியே நடந்தான். அரசபதவி கிடைத்தும் அதை அவன் விரும்பவில்லை. அண்ணனின் பாதுகைகளை அரியணைமீது வைத்துத் தான் அடியவனாக இருந்து நாட்டை ஆண்டான். இராமன் காட்டிலிருந்து திரும்பி வந்ததும் அவனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தான் பரதன்.

இராமனிடம் அனுமன் அளவிலாப் பக்தியுடைவன். இலங்கையில் இராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வந்து சொன்னான். இராவணனுடன் நடந்த போரில் இராமனுக்கு உதவியாக இருந்தான்.

இராவணன் இலங்கையின் அரசன்; மிகுந்த வல்லமை படைத்தவன்; சிறந்த அறிவாளி. எனினும் சீதைமீது மோகங்கொண்டு அவளை இலங்கைக்குத் தூக்கிச் சென்றதால் அவன் அழிய நேரிட்டது. இராமன் போரில் அவனைக் கொன்றான். தருமத்தை மீறி நடந்து கொண்டதால் அவனுடைய அறிவும், வீரமும், பக்தியும் பயனற்றுப் போயின.

இராவணனின் தம்பி விபீடணன். தவறான வழியில் சென்ற அண்ணனைத் திருத்த முயன்றான். அவன் கேட்காததால், அவனிடமிருந்து பிரிந்து இராமனிடம் சரணடைந்தான். இராவணனின் மற்றொரு தம்பி கும்பகருணன். அவனும் சிறந்த வீரன். இராவணன் தவறான வழியில் செல்வதைத் தடுக்க முயன்றன்; பல அறவுரைகள் கூறினான். அவன் கேட்கவில்லை. எனினும் அண்ணனுக்காக இறுதிவரை போராடி உயிர்நீத்தான். இராவணனின் மகன் இந்திரசித்து. இந்திரனை வென்ற பெரு வீரன். மந்திர தந்திரங்களில் வல்லவன். தந்தையின் மானங்காக்கப் போரிட்டு மடிந்தான். இன்னும் இவர்களைப் போன்று எத்தனையோபேர் இராமாயணத்தில் வருகிறார்கள். அவர்கள் அனைவரின் மூலமாக மனித உள்ளத்தின் வெவ்வேறு இயல்புகளையும் தருமத்தின் அழிவின்மையையும் விளக்குகிறார் வான்மீகி.

இராமேசுவரத்தில் உள்ள உருவச் சிலைகள்

அனுமன், சீதை , இராமன், இலட்சுமணன்