பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஈராக் -ஈரான்

பாதிரியார் ஒருவர் இவற்றையெல்லாம் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டார். ஈசாப் சொல்லாத கதைகள் பலவும் இத்தொகுப்பில் சேர்ந்துள்ளன. ஈசாப் கதைகள் இப்போது உலகில் எல்லா மொழிகளிலும் வெளிவந்துள்ளன.


ஈராக்: ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நாடு ஈராக். மெசப்பொட்டேமியா என்பது இதன் பழங்காலப் பெயர். மெசப்பொட்டேமியா என்றால் இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ள நாடு என்று பொருள். டைக்ரிஸ், யூப்ரட்டீஸ் என்ற இரு ஆறுகள் இங்கு பாய்கின்றன. இவை கடலில் கலக்கு முன்பு ஒன்று கூடுகின்றன. இந்த இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட சமவெளி மிகவும் செழிப்பானது. பழங்கால நாகரிகங்கள் தோன்றிய நாடுகளுள் இதுவும் ஒன்றாகும். அக்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்களின் சிதைவுகளை இன்றும் இங்குக் காணலாம்.

ஈராக்கின் பரப்பு 4,47,000 சதுர கி.மீ. மக்கள் தொகை 70 லட்சம் (1959). பெரும்பாலோர் முஸ்லிம்கள், இவர்கள் அரபு மொழி பேசுகிறார்கள். விவசாயம் இங்கு நடைபெறும் முக்கியத் தொழில், பார்லி, கோதுமை, பருத்தி முதலியன விளைகின்றன. பேரீச்சம்பழம் அதிகமாக உற்பத்தியாகிறது. உலகம் முழுவதிலும் கிடைக்கும் பேரீச்சம் பழத்தில் 80% ஈராக்கில்தான் விளைகிறது. இங்கு ஆடு, மாடு, ஒட்டகம் முதலியவற்றைப் பெருமளவில் வளர்க்கின்றனர். இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாகக் கிடைக்கிறது. இங்கு எடுக்கும் பெட்ரோலியத்தைப் பெரிய குழாய்கள் மூலம் மத்திய தரைக்கடலுக்கு எடுத்துச் செல்லுகின்றனர். அங்கிருந்து அது அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கோதுமை, பார்லி, பேரீச்சம்பழம், ஆடு மாடுகள், கம்பளம், பஞ்சு முதலியன இந்நாட்டின் மற்ற ஏற்றுமதிப் பொருள்கள்.

இந்நாட்டின் தலைநகர் பாக்தாது. ஈராக் 1958ஆம் ஆண்டில் குடியரசாயிற்று.


ஈரான்: பாரசீகம் என்ற நாட்டின் புதிய பெயர்தான் ஈரான். இது ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. ஈரான் நாட்டின் பரப்பு சுமார் 16,38,000 சதுர கி.மீ. இங்கு இரண்டு கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஈரான் நாட்டைச் சுற்றிலும் மலைகள் உள்ளன. நடுப்பாகம் பீடபூமியாகும். இதில் பெரும்பகுதி பாலைவனம். தெற்கே கடற்கரை ஓரமாகச் செழிப்பான சமவெளிகள் உள்ளன. இந்நாட்டில் கோடைகாலம் [ஈராக் பாரசீக இஸ்பகான் ஈரான் வளைகுடா எண்ணெய்க் கிணறு ஆப்கானிஸ்தானம் பாக்கிஸ்தான் ஒமான் வளைகுடா கம்பளம் வட சோவியத் யூனியன் துருக்கி காஸ்ப்பியன் கடல் சோவியத் யூனியன் டெஹரான்] ஈரான்


அதிக வெப்பமாகவும், குளிர்காலம் அதிகக் குளிராகவும் இருக்கும். நாட்டின் பகுதியில் மழை அதிகம்; மற்ற இடங்களில் குறைவு. விவசாயம் இந்நாட்டின் முக்கியத் தொழில், கோதுமை, பார்லி, சர்க்கரை, பீட், பருத்தி, பேரீச்சம்பழம். தேயிலை, புகையிலை முதலியன விளைகின்றன. நாடோடிகளாக வாழும் மக்கள் ஆடு. மாடு, குதிரை முதலியவற்றை வளர்க்கிறார்கள். பாரம் சுமக்கக் கழுதைகளையும், பாலைவனங்களில் செல்ல ஒட்டகங்களையும் பயன்படுத்துகிறார்கள். மலைகளில் சிறுத்தை, புலி, கரடி முதலிய கொடிய விலங்குகள் வசிக்கின்றன. காடுகளில் ஓநாய், நரி, காட்டுப்பன்றி முதலியன அதிகம்.

ஈரானில் பெட்ரோலியம் அதிகமாகக் கிடைக்கிறது. கம்பள நெசவு மற்றொரு முக்கியத் தொழில் பாரசீகக் கம்பளம் உலகப் புகழ் பெற்றது. பெட்ரோலியம், சமக்காளம், தோல், உலர்த்தப்பட்ட பழங்கள், கம்பளம் முதலியவை முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள்.

ஈரான் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. சாரதூஷ்டிரர் என்பவர் தோற்றுவித்த மதம் நாடெங்கும் பரவியிருந்தது. ஈரான் மன்னர்கள் அருகில் உள்ள பல நாடுகளையும் வென்று தம் ஆட்சியையும், மதத்தையும் பரப்ப முற்பட்டனர். ஆனால் இவர்களுடைய முயற்சியைக் கிரேக்கர்கள் முறியடித்தனர். பிறகு அராபியர்களும் பாரசீகத்தின் மீது படையெடுத்தனர். இவர்கள் சாரதூஷ்டிர மதத்தை அழித்து-