பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஈக்வடார் - ஈசாப்


ஈக்குத் தாடைகள் இல்லை. ஆகையால் இது கடிக்காது. ஆனால் இது எப்படித் தீனி தின்கிறது தெரியுமா? சோறு, மிட்டாய். சர்க்கரை, வெல்லம், புளி எதையேனும் தின்னவேண்டுமானால் அதன் மேல் உட்கார்ந்து, தன் வாயில் கசியும் நீரை முதலில் அதன் மேல் உமிழும். பிறகு அந்த உணவு கரையும் வரையில் அதைத் தேய்த்துக்கொண்டே இருக்கும். கரைத்த பின்னர் அதை அப்படியே உறிஞ்சிவிடும்.

ஈயின் கால்களில் நுண்ணிய உரோமம் அடர்ந்திருக்கும். அசுத்தமான இடங்களில் ஈ உட்காரும்போது அங்குள்ள கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய நோய்க்கிருமிகள் அந்த உரோமத்தில் ஒட்டிக் கொள்ளும். ஓர் ஈயின் கால்களில் ஒரேசமயத்தில் இருபது லட்சம் கிருமிகள் ஒட்டிக்கொள்ளக் கூடுமாம். அந்த ஈ பறந்து வந்து நம் உணவின்மேல் உட்காரும்போது, அந்த நோய்க் கிருமிகள் உணவில் கலந்துவிடுகின்றன; நமக்கு நோயை உண்டாக்குகின்றன. இப்படித்தான் சீதபேதி, டைபாயிடு, காலரா போன்ற கொடிய தொற்றுநோய்கள் பரவுகின்றன.

கண் ஈ என்பது மிகச் சிறியது. இதனைக் கண் கொசு என்றும் சொல்வர். நம் கண்களில் வந்து மொய்க்கும். இவற்றால் தான் கண் நோய் பரவுகிறது.

அசுத்தமே ஈயின் இருப்பிடம். ஆகையால் நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் நாம் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுவது நல்லது. உணவுப் பண்டங்களை எப்பொழுதும் மூடியே வைத்திருக்கவேண்டும்.


ஈக்வடார் : தென் அமெரிக்காக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள நாடு ஈக்வடார். இந்த நாட்டின் குறுக்கே பூமத்திய ரேகை செல்வதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. ஸ்பானியரின் மொழியில் பூமத்திய ரேகைக்கு ஈக்வடார் என்று பெயர்.

ஈக்வடாரின் பரப்பு 2,70,000 சதுர கி.மீ. இந்நாட்டின் நடுவில் வடக்குத் தெற்காக ஆண்டீஸ் மலைத்தொடர் செல்கிறது. மலைக்கு இருபுறமும் சமவெளிகள் உள்ளன. ஆனால் நாட்டு மக்களுள் 75% மலைப்பகுதிகளில்தான் வாழ்கிறார்கள். நாட்டின் தலைநகரான கீட்டோவும் ஒரு மலைமீதுதான் உள்ளது.

ஆண்டீஸ் மலைக்கு மேற்குப்புறத்தில் அமைந்துள்ள சமவெளி மிகச் செழிப்பானது. அங்கு கரும்பு, வாழை, காப்பி, கோக்கோ முதலியன விளைகின்றன. மற்ற பகுதிகளில் காடுகள் அதிகம். காட்டு மரங்களும் படகுகள் செய்யப் பயன்படும். பால்சா என்ற தக்கை மரங்களும் இந்நாட்டில் அதிகமாக வளர்கின்றன. டாகுவா என்ற ஒருவகை மரங்களும் அதிகம். இம்மரத்தின் விதைகளிலிருந்து பொத்தான்கள் செய்கிறார்கள். இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் இவ்விதைகள் ஏற்றுமதியாகின்றன.

படம்: ஈக்வடார்

இந்நாட்டு மக்களில் பாதிப்பேர் செவ்விந்தியக் குடிகள். நீக்ரோக்களும் ஸ்பானியர்களும் இங்கு வாழ்கின்றனர். ஸ்பானிய மொழி அரசாங்க மொழி. முக்கிய மதம் கத்தோலிக்கக் கிறிஸ்தவம். மக்கள் தொகை 41,20,000 (1958).


ஈசாப் : 'சீச்சீ! இந்தப்பழம் புளிக்கும்" என்று சொல்லிக்கொண்டே தனக்கு எட்டாத திராட்சைப் பழக் குலையை வீட்டு ஓடிப்போன நரியின் கதை உங்களுக்குத் தெரியும். உலகத்தில் உள்ள எல்லா நாட்டுக் குழந்தைகளுக்கும் இக்கதை தெரியும். முதன்முதல் இக்கதையைச் சொன்னவர் ஈசாப் என்பவர். இவர் இதைப்போலப் பல கதைகள் சொல்லியிருக்கிறார். இவர் கிரேக்க நாட்டவர்; 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். முதலில் இவர் ஓர் அடிமையாக இருந்தாராம்; பிறகு விடுதலைபெற்று ஊர் ஊராகச் சென்று சிறுசிறு கதைகளைச் சொல்லி வந்தார். அவற்றின் மூலம் மக்களுக்கு நீதிகள் புகட்டி வந்தார். இவருடைய கதைகள் எல்லாம் சுவை நிறைந்து இருக்கும். இக்கதைகள் எல்லாமே இவர் சொன்னவையல்ல. இவற்றுள் பல ஏற்கெனவே இந்தியாவிலிருந்து கிரீஸ் நாட்டுக்குச் சென்றவை. ஈசாப் இக்கதைகளை எழுதி வைக்கவில்லை. இவருக்கு 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்திருந்த-