பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26

இஸ்லாம் – ஈ

பிடிக்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலுக்கும் அராபியருக்குமிடையே இருபதாண்டுகளாகத் தீராத பூசல்களும், போர்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

இஸ்ரவேல் மிகச் சிறியதொரு நாடு, மண்வளம் இல்லாதது. ஆனாலும் யூதர்கள் கடும் உழைப்பாளர்கள். புதிய காடுகளை வளர்த்தும், பாசனத் திட்டங்களை வகுத்தும் நாட்டைச் செழிப்பாக்கிக்கொண்டு வருகிறார்கள். எல்லாருக்கும் கட்டாய இலவச விவசாயப் பயிற்சி அளிக்கப்படு கிறது. இந்நாடு மத்தியதரைக் கடலையடுத்து அமைந்துள்ளது. கடற்கரைப் பகுதிகள் செழிப்பானவை. நாட்டின் மத்தியில் மலைகளும், பீடபூமிகளும் உள்ளன. இதன் பகுதியில் பாலைவனம் பரவியுள்ளது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, உருளைக்கிழங்கு, கோதுமை, பார்லி ஆகியவை இந்நாட்டில் விலையும் உணவுப் பொருள்கள். இப்போது ரசாயனத் தொழிற்சாலைகள் பல நடைபெறுகின்றன. வைரத்துக்குப் பட்டை தீட்டுதல் இங்கு நடக்கும் சிறப்பான ஒரு தொழில்.

இந்நாட்டின் பரப்பு சுமார் 20,000 சதுர கி.மீ. மக்கள் தொகை சுமார் 20 லட்சம் (1960).

பழைய தலைநகரம் எருசலேம். புதிய தலைநகரம் டெல் அவிவ். இது ஒரு துறைமுகப்பட்டினம்.


இஸ்லாம்: உலகில் உள்ள பெரிய மதங்களுள் இஸ்லாமும் ஒன்றாகும். இஸ்லாம் என்ற அரபுச் சொல்லுக்கு 'அமைதி பெறும் வழி' என்பது பொருள். இம்மதத்தைச் சேர்த்தவர்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர். உலகம் முழுவதிலும் இம்மதம் பரவியுள்ளது. இம்மதத்தை நிலை நிறுத்தியவர் முகமது நபிகள் நாயகம் ஆவார். இவருக்கு முன்னர் பலர் இஸ்லாம் வழியை மக்களுக்கு விளக்கி வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நபிகள் என்று பெயர்; பல ஆயிரக்கணக்கான நபிகள் உலகில் பிறந்துள்ளனர். இறுதியாக வந்தவர் முகமது நபி. முகமது நபிகளின் போதனைகள் இஸ்லாமியரின் திருமறையான திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்துள்ளன.

இஸ்லாம் மதத்தினர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகள் உண்டு அவை:

1. கடவுள் (அல்லாஹ்) ஒருவரே உண்டு என்றும், முகமது நபிகளே அவருடைய தூதுவர் என்றும் நம்புதல்; 2. நாள் தோறும் ஐந்து முறை ஆண்டவனைத் தொழுதல்: 3, குர் ஆனில் விதித்துள்ள படி ஏழைகளுக்கு ஈதல்; 4. ஆண்டு தோறும் ரமலான் (ரம்சான்) மாதத்தில் பகலில் உண்ணாநோன்பு இருத்தல்; 5. ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது மக்காவுக்கு யாத்திரை செல்லுதல்.

முஸ்லிம்கள் உருவமில்லாத கடவுளையே வணங்க வேண்டும். எந்த உருவத்தையும் கடவுளாக வணங்கக்கூடாது. கொலை, களவு, குடி, பொறாமை ஆகிய குற்றங்களை விலக்கவேண்டும்; தொழிலில் நேர்மை தவறக்கூடாது; வட்டி வாங்கக் கூடாது; ஏழை எளியவர்களை ஆதரிக்க வேண்டும். எல்லாரிடத்திலும் அன்பாய் நடந்து கொள்ளவேண்டும். இவை இஸ்லாம் மதத்தின் முக்கிய போதனைகள் ஆகும்.


ஈ : ஈ மொய்த்த பண்டங்களை நாம் தின்னக்கூடாது. ஏன் தெரியுமா? ஈயினால் தான் பல கொடிய நோய்கள் பரவுகின்றன.

ஈக்களில் பலவகை உண்டு. அவை வீட்டு ஈ, மாட்டு ஈ, இறைச்சி ஈ, பழ ஈ, கண் ஈ என்பன. ஆனால் வீட்டு ஈயை மட்டுந்தான் நாம் சாதாரணமாக ஈ என்கிறோம். ஈ பூச்சி இனத்தைச் சேர்ந்தது. பூச்சிகளுக்கு நான்கு இறகுகள் இருக்கும். ஆனாய் ஈக்கு மட்டும் இரண்டே இறகுகள் உள்ளன.

எங்கெல்லாம் அசுத்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஈயையும் காணலாம். சாணம், மலம், குப்பை போன்ற அசுத்தங்களில் ஈ முட்டையிடுகிறது. ஈக்கள் வெகுவேகமாகப் பெருகும். ஈயின் முட்டைகள் 10 நாளில் பொரிக்கும். அவற்றிலிருந்து புழுக்கள் தோன்றும். சில நாளில் இப்புழுக்கள் அசைவற்ற லார்வாக்களாக மாறுகின்றன. இறுதியில் லார்வாக்களிலிருந்து நன்கு வளர்ந்த ஈக்கள் வெளிவருகின்றன.

ஈயின் தலை கரியதாக இருக்கும். அதன் இரு பக்கங்களிலும் இரு கண்கள் உள்ளன. இக்கண்களின் அமைப்பு விந்தையானது. ஒவ்வொரு கண்ணிலும் 4,000 சிறு கண்கள் நெருக்கமாகச் சேர்ந்துள்ளன. இத்தகைய கண்களுக்குக் கூட்டுக் கண்கள் என்று பெயர். இக்கண்களினால் தன் உடலின் பின்புறத்திலும் ஈயினால் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் இருட்டில் ஈக்களுக்குக் கண் தெரியாது.

முட்டை புழு ( லார்வா ) கூட்டுப் புழு (பியூப்பா)