பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உலக யுத்தம் 43


ஜெர்மனி, பிரிட்டனையும் பிரான்னையும் ஒடுக்கத் திட்டமிட்டது. தன் பொருளாதார வலிவையும், படைபலத்தையும் பெருக்குவதில் தீவிரமாக முனைந்தது. ஜெர்மனியின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய பிரான்ஸ், ரஷ்யாவுடன் உறவு பூண்டது. இந்த இரு நாடுகளும் தம் படைபலத்தைப் பெருக்கத் தொடங்கின.

ஜெர்மனியின் அண்டைநாடு ஆஸ்திரியா. இதற்குக் கடற்கரை இல்லை. அதனால் துறைமுகமும் இல்லை. இது கிழக்கே சென்று ஈஜீயன் கடலில் துறைமுகம் ஒன்று பிடிக்க விரும்பிற்று. அந்த எண்ணம் கைகூடாதபடி இதன் அண்டை நாடுகளான சர்பியா, மான்டெனீக்ரோ என்ற இரு நாடுகளும் குறுக்கே நின்றன. அதனால் ஆஸ்திரியாவுக்கும் சர்பியாவுக்கும் இடையே பகைமை மூண்டுகொண்டிருந்தது.

இந்த நிலையில் ஆஸ்திரியாவின் பட்டத்து இளவரசனையும், அவன் மனைவியையும் சர்பியாவைச் சேர்ந்த ஒருவன் 1914 ஜூன் 28-ல் சுட்டுக் கொன்றுவிட்டான். சர்பிய அரசாங்கம் அவனைத் தூண்டிவிட்டதாக ஆஸ்திரியா குற்றம் சாட்டியது; இதைத் தொடர்ந்து சாபியாமீது படையெடுத்தது ஆஸ்திரியா. ரஷ்யாவின் துணையை சர்பியா நாடியது. ஆஸ்திரியாவுக்கு உதவியாக ஜெர்மனி வந்தது.

இத்தருணத்தைப் பயன்படுத்தி, பிரான்ஸைத் தாக்க ஜெர்மனி முயன்றது. பெல்ஜியத்தின் வழியாக ஜெர்மனி தன் படையைச் செலுத்தியது. பெல்ஜியத்துக்கு உதவ பிரிட்டன் விரைந்தது. அது ஜெர்மனியின்மேல் போர் தொடுத்தது. பிரிட்டனுடன் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, சர்பியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அணிசேர்ந்தன. அப்போது இந்தியா பிரிட்டனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் அது பிரிட்டனுக்குப் பொன்னும், படையாட்களும் கொடுத்து உதவிற்று. இந்த அணியைச் சேர்ந்த நாடுகளுக்கு நேசநாடுகள் என்று பெயர். ஜெர்மனியுடன் ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்ந்தன. இவற்றுக்கு மத்திய அரசுகள் என்று பெயர்.

நேச நாடுகளுக்கும், மத்திய அரசுகளுக்குமிடையே தரையிலும் கடலிலும் பல பெரிய போர்கள் நடந்தன. ஜெர்மானியர் நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஆகாய விமானங்களையும் கொண்டு நேச நாடுகளுக்குப் பெருஞ்சேதம் விளைத்தனர். நேசநாடுகள் முதன்முதல் டாங்கிகளைப் பயன்படுத்தின. இறுதியில் ஜெர்மனி தோற்றது. யுத்தம் 1918 நவம்பர் 11-ல் முடிவுற்றது.

இந்தக் கொடிய யுத்தத்தில் இரண்டு கோடி பேர் உயிரிழந்தனர். யுத்தம் ஓய்ந்தவுடன் உலகம் முழுவதிலும் பரவிய விஷக் காய்ச்சலில் இரண்டுகோடி மக்கள் மாண்டனர். யுத்தத்தில் பங்குகொண்ட எல்லா நாடுகளுக்கும் கணக்கற்ற பொருள் நட்டம் ஏற்பட்டது. வெர்சேல்ஸ் என்ற ஊரில் 1919 ஜூன் 28-ல் போரில் ஈடுபட்ட நாடுகளுக்கிடையே உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டது. அதன்கீழ் ஜெர்மனி படைதிரட்டும் உரிமையை இழந்தது. போரில் கலந்துகொண்ட நேச நாடுகளுக்கு அது நட்டஈடு கொடுக்க வேண்டியதாயிற்று. ஜெர்மனியைச் சேர்ந்த சில வளமான இடங்களை பிரான்ஸ் பறித்துக் கொண்டது.

உலகில் மீண்டும் யுத்தமே நேரிடாமல் பார்த்துக்கொள்ளவும், ஒரு நாடு மற்றொரு நாட்டின்மேல் காரணமின்றிப் படையெடுப்பதைத் தடுக்கவும் வேண்டியதன் அவசியத்தை உலகநாடுகள் உணர்ந்தன. இதற்கெனச் சர்வதேச சங்கம் (த.க.) ஒன்று நிறுவப்பட்டது. உலக நாடுகள் பல இச்சங்கத்தில் சேர்ந்தன. ஆனால் இதற்குப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட அமெரிக்கா இதில் சேரவே இல்லை.

உலக யுத்தத்தின் நினைவுச் சின்னம். ஐரோப்பாவில் நெதர்லாந்து நாட்டில் உள்ளது.