பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44 உலக யுத்தம்


இரண்டாம் உலக யுத்தம் : முதல் உலக யுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட வெர்சேல்ஸ் உடன்படிக்கை ஜெர்மனியின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. அதன்படி நேசநாடுகளுக்குச் சேரவேண்டிய நட்ட ஈடுகளை ஜெர்மனியால் கொடுக்க முடியவில்லை. ஜெர்மானியர் அதைத் தமக்கு ஒரு மானக்கேடாக எண்ணினர்.

ஜெர்மனிக்கு 1933-ல் ஹிட்லர் (த.க.) சர்வாதிகாரியானார். உலகில் ஜெர்மானியரே மிக உயர்ந்த குலத்தவர் என்ற கொள்கையுடையவர் இவர். யூதர்கள் ஜெர்மனியின் பகைவர் என்று இவர் எண்ணினார். இலட்சக்கணக்கான யூதர்களை நாட்டைவிட்டு விரட்டினார். அயல்நாடுகளுக்கு ஜெர்மனி கொடுக்க வேண்டிய நட்ட ஈட்டையும், கடன்களையும் கொடுக்காமல் நிறுத்தினார். பேச்சாற்றலினால் ஜெர்மானியரைப் போர்ப் பாதையில் தூண்டிவிட்டார்.

மற்றொரு பக்கம் ஜப்பான் 1931-ல் சீனாவின் ஒரு பகுதியான மஞ்சூரியாவைக் கைப்பற்றியது. அப்பொழுது இத்தாலியின் சர்வாதிகாரி முசொலீனி (த.க.) என்பவர் இத்தியோப்பியாவைக் கைப்பற்றினார். இவர்களின் முறைகேடான செயல்களைச் சர்வதேச சங்கம் கண்டிக்கவே இல்லை. தன்னைக் கண்டிக்கும் துணிவும் அச்சங்கத்துக்கு இல்லை என்பதை ஹிட்லர் கண்டுகொண்டார்.

ஹிட்லர் 1939 தொடக்கத்தில் ஆல்பேனியாவையும், செக்கோஸ்லோவாக்கி யாவையும் கைப்பற்றினர். அவருடைய தீயபோக்கைத் தடுத்து நிறுத்த பிரிட்டன் முயன்றது. ஆனால் பயன் இல்லை. அடுத்து ஹிட்லர் போலந்தைத் தாக்கினர். அதனால் 1939 செப்டெம்பர் முதல் நாள் பிரிட்டனும், பிரான்ஸும் ஜெர்மனியின்மேல் போர் தொடுத்தன. இரண்டாம் உலக யுத்தமும் தொடங்கியது.

ஜெர்மனிக்கு இத்தாலி உதவியது. ஹிட்லர் மின்னல் வேகத்தில் தம் படைகளைச் செலுத்தி ஐரோப்பிய நாடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றினர். பிரான்ஸும் தோற்றது. பிரிட்டனுக்கு அமெரிக்கா துணைபுரிந்தது. ஆயிரக்கணக்கான விமானங்களையும், பறக்கும் குண்டுகளையும் ஏவி பிரிட்டனை அழிக்க முயன்றார் ஹிட்லர். ஆனால் அவர் எண்ணம் கைகூடவில்லை. ஹிட்லருக்கு உதவியாக முசொலீனி வட ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கினார். அங்கே இந்தியப் போர்வீரர்களைக் கொண்ட பிரிட்டிஷ் படைகளும், அமெரிக்கா, கானடா ஆகிய நாட்டுப் படைகளும் இத்தாலியரை முறியடித்து வெற்றிகண்டன. ஹிட்லர் 1941 ஜூன் 27-ல் முன்னறிவிப்பு இன்றி ரஷ்யாவைத் தாக்கினார். அவருடைய வாழ்க்கையின் முடிவுக்கு இந்தத் தாக்குதலே காரணமாயிற்று.

ஜெர்மனிக்குத் துணையாக ஜப்பானும் போரில் இறங்கியது. பசிபிக் சமுத்திரத்திலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் இருந்த அமெரிக்கத் தளங்களை ஜப்பான் தாக்கியது. அதனால் அமெரிக்காவும் யுத்தத்தில் இறங்கிற்று. ஆயிரக்கணக்கான கப்பல்களையும், விமானங்களையும், போர்க் கருவிகளையும் அது பிரிட்டனுக்குக் கொடுத்து உதவியது.

ஐந்தாண்டுகள் யுத்தம் நடந்தது. ரஷ்யாவில் உறைபனியிலும், கடுங்குளிரிலும் சிக்குண்டு ஜெர்மானியர் லட்சக்கணக்கில் மடிந்தனர். ரஷ்யர்கள் அவர்களைத் துரத்திச் சென்று ஜெர்மனிக்குள் நுழைந்தனர். பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகளும் பிரெஞ்சுக் கரையில் இறங்கி முன்னேறி ஜெர்மனிக்குள் புகுந்தன. இறுதியில் ஜெர்மனி தோற்றது. 1945 மே 8-ல் சரணடைந்தது. ஹிட்லரும், படைத்தலைவர்கள் சிலரும் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர்.

ஜெர்மனிக்குத் துணைநின்ற ஜப்பானுக்கு முதலில் பல இடங்களில் வெற்றி கிட்டியது, தென்கிழக்கு ஆசிய நாடுகளையும், பர்மாவையும் ஜப்பான் கைப்பற்றியது. இறுதியில் அமெரிக்கர்கள் 1945 ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமா என்ற நகரின்மேல் அணுகுண்டு ஒன்றை வீசினர்; அதே மாதம் 9ஆம் நாள் நாகசாகி என்ற நகரின் மேல் மற்றொரு அணுகுண்டைப் போட்டனர். இந்த இரு அணுகுண்டுகளால் இவ்விரு நகரங்களும் எரிந்து சாம்பலாய்விட்டன. ஜப்பான் தோல்வியை ஒப்புக் கொண்டு அமெரிக்கரிடம் சரணடைந்தது. அத்துடன் இரண்டாம் உலக யுத்தமும் முடிந்தது.

அணுகுண்டின் விளைவால் எழும்பிய புகை மண்டலம்