பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

72 ஏற்றுமதி-இறக்குமதி


உவா ஏற்றம் இடையுவா ஏற்றம்

ஏற்றவற்றத்தால் பல நன்மைகள் உண்டு. ஏற்றவற்றங்கள் இருந்தால்தான் சில இடங்களில் படகுகளும் கப்பல்களும் துறைமுகத்திற்குள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ இயலும். ஏற்றவற்றமுள்ள இடத்தில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதில்லை. உறைவதில்லை. நியூபவுண்டுலாத்திலுள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்ற வற்றங்கள் குளிர்காலத்திலும் அதிகமாக உள்ளதால் அங்கு நீர் உறைவதில்லை. குறைந்த ஏற்றங்கள் உள்ளபொழுது. மீன்கள் ஏராளமாகக் கரைக்கு வருகின்றன. கடற்கரையில் பரந்த அழகிய மணல்வெளிகள் தோன்றுவதற்கும் அலைகளின் (த.க.) ஏற்றவற்றமே காரணம்.


ஏற்றுமதி - இறக்குமதி: இந்தியாவில் தேயிலை, பருத்தி, சர்க்கரை போன்ற பொருள்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. தேவைக்கு அதிகமாக உள்ள பொருள்களை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு நாம் அனுப்புகிறோம். இவ்விதம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் பொருள்களை அனுப்புவதற்கு ஏற்றுமதி என்று பெயர்.

இந்தியாவில் மக்கள் தொகை மிகுதி. ஆனால், இங்கு விளையும் உணவுப்பொருள் நம் தேவைக்குப் போதாது. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க அமெரிக்கா முதலிய வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை நாம் வாங்கிக்கொள்கிறோம். இவ்வாறு ஒரு நாட்டினர் தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களையும், போதிய அளவு உற்பத்தியாகாத பண்டங்களையும் பிறநாடுகளிலிருந்து வாங்கிக் கொள்வது இறக்குமதி எனப்படும்.


சர்க்கரை- காப்பிக்கொட்டை- தேயிலை-மிளகு-துணி- முந்திரிப் பருப்பு -சணல்-புகையிலை- -தோல்- நிலக்கரி - இரும்புத்தாது- தையல் எந்திரம் சைக்கிள்

இந்தியா ஏற்றுமதி-இறக்குமதி

உணவுப் பொருள்கள்- ரசாயனப் பொருள்கள்- எந்திர சாதனங்கள்— தொழிற்சாலைகளுக்குத் தேவை யான மூலப் பொருள்கள்


பொதுவாக, இறக்குமதி செய்யும் பொருளின் அளவைவிட, ஏற்றுமதி செய்யும் பொருளின் அளவு அதிகமாகஇருப்பதையே ஒவ்வொரு நாடும் விரும்பும். ஏனெனில், அப்போதுதான் வெளிநாட்டுப் பணம் ஒரு நாட்டில் அதிகமாக வந்து குவியும். அதனால் அதன் பொருளாதாரமும் உயரும். ஒரு நாட்டின் ஏற்றுமதி கூடுதலாக இருக்கவேண்டுமானால், அந்நாட்டின் பண்டங்களுக்கு அயல் நாடுகளில் தேவை அதிகமாக இருக்கவேண்டும். இதற்கு ஏற்றுமதிப் பண்டங்களின் விலை மலிவாக இருக்கவேண்டும்; அதன் தரமும் உயர்ந்து இருக்கவேண்டும். ஒவ்வொரு நாடும் பிறநாடுகளுடன் வாணிக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு ஏற்றுமதி இறக்குமதி செய்து வருகிறது.

பண்டைக் காலத்தில் இந்தியாவின் வெளிநாட்டு வாணிகம் சிறந்து விளங்கியது. இந்தியாவிலிருந்து, முக்கியமாகத் தமிழ்நாட்டிலிருந்து, முத்து, மணி, ஏலம், இலவங்கம், இஞ்சி, மயில் தோகை, மரம், துணி ஆகியவை பாபிலோன், ரோமாபுரி, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இன்று இந்தியாவிலிருந்து சர்க்கரை, காப்பிக்கொட்டை, தேயிலை, மிளகு, முந்திரிப்பருப்பு, துணி, சணல், புகையிலை, தோல், நிலக்கரி, இரும்புத்தாது, தையல் எந்திரம், சைக்கிள் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. உணவுப்பொருள்கள் எந்திர சாதனங்கள், ரசாயனப் பொருள்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் முதலியவற்றைப் பிறநாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துகொள்கிறது.