பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஐக்கிய நாடுகள் சபை 73

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலகக் கட்டடம். இது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை : (United Nations Organization ) உலகத்தில் போர் ஏற்படாமல் தடுத்து, நாடுகளிடையே நட்புறவை வளர்ப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு சர்வதேச நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபை ஆகும்.

1914-ல் தொடங்கிய முதல் உலகயுத் தத்தில் பல இலட்சம் மக்கள் மாண்டனர். இது உலகுக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. இனிமேல் பெரிய யுத்தம் எதுவும் வராமல் தடுக்க வேண்டும் என உலக நாடுகள் கருதின. தகராறுகளைச் சமரசமாகத் தீர்ப்பதே சிறந்த வழி என்பதை அவை உணர்ந்தன. இந்நாடுகள் ஒன்று கூடிச்சர்வதேச சங்கம் (League of Nations த.க.) என்னும் ஓர் அமைப்பை நிறுவின. ஆனால், அச்சங்கத்தில் உறுப்பு வகித்த சில நாடுகள் அதை மதிக்காமல் நடந்தன. அவற்றைக் கண்டித்துக்கேட்க அதனால் இயலவில்லை. விரைவில் அச்சங்கம் செயலிழந்தது. மீண்டும் 1939-ல் இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்டுப் பெரும் நாசம் விளைந்தது. இந்த யுத்தம் முடிந்ததும், மீண்டும் பல நாடுகள் முனைந்து ஒரு சர்வதேச அமைப்பை ஏற்படுத்த முயன்றன. இதற்கென 1945 ஜூன் 26-ல் அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாடு நடைபெற்றது. இதில் 51 நாடுகள் கலந்து கொண்டன. 1945 அக்டோபர் 24-ல் ஐ. நா. சபை நிறுவப் பெற்றது. ஐ.நா.வின் விதிமுறைகள் அடங்கிய ஐ.நா. சாசனம் (United Nations Charter) வகுக்கப்பட்டது. அதன் பிறகு பல நாடுகள் ஐ. நா. வின் உறுப்பு நாடுகளாகச் சேர்ந்தன. இப்பொழுது ஐ.நா.வில் 126 நாடுகள் அங்கம் பெற்றுள்ளன.

ஐ.நா. சபை பல உறுப்புகளைக் கொண்டது. அவற்றுள் பொதுச்சபை (General Assembly), பாதுகாப்புச்சபை (Security Council), பொருளாதார, சமூக சபை Economic and Social Council), தர்மகர்த்தா சபை (Trusteeship Council), சர்வதேச நீதி மன்றம், தலைமைச் செயலகம் ( Secretarint ) ஆகியவை முக்கியமானவை.

ஐ.நா.வில் உறுப்பாக உள்ள எல்லா நாடுகளுக்கும் பொதுச் சபையில் இடம் உண்டு. ஐ.நா. சாசனத்தில் கண்டுள்ள எந்தப் பொருளைப் பற்றியும் ஆராய்ந்து முடிவெடுக்க இச்சபைக்கு உரிமை உண்டு.

பாதுகாப்புச் சபையில் 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றுள் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், தேசீயச் சீனா (பார்மோசா) ஆகிய ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் நிரந்தர உறுப்பினர்களாவர். சர்வதேச சமாதானத்தையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவது பாதுகாப்புச் சபையின் முதல் பொறுப்பாகும். எல்லா முடிவுகளுக்கும் நிரந்தர உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். நிரந்தர உறுப்பினர் ஒருவர் எதிர்த்தாலும் எந்த முடிவும் செல்லாமல் போய்விடும். நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ள இந்த அதிகாரத்திற்கு 'ரத்து (வீட்டோ) அதிகாரம்' என்று பெயர்.

பொருளாதார சமூக சபையில் 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எல்லா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், ஒவ்வொருவருக்கும் வேலை கிடைக்கும்படிச் செய்வதும், பொருளாதார சமூக முன்னேற்றத்தை வளர்ப்பதும் இச்சபையின் பணிகளாகும்.

[[ஐக்கிய நாடுகள் சபையின் கொடி. உலகப் படத்தைச் சுற்றியுள்ள ஒலிவ மரத்தின் கிளைகள் சமாதானத்தைக் குறிக்கின்றன]]