பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இந்துஸ்தானி இசை - இந்தோனீசியா


பிரிட்டிஷ் கயானா, தென் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, மோரீசு முதலான இடங்களிலும் இந்துக்கள் வாழ்கின்றார்கள். இந்து மதத்தின் கொள்கைகளைப் பற்றி எல்லா இந்திய மொழிகளிலும் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. வடமொழியில் வேதங்கள், உபநிடதங்கள் தமிழில் தேவாரம் முதலிய திருமுறைகள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா ஆகியவை அரிய நூல்கள். தமிழ் மன்னர்கள் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் மிகப்பெரிய கோயில்கள் கட்டியுள்ளனர். காசி, சோமநாதபுரம், பத்ரிநாத், புவனேசுவரம், தஞ்சாவூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், ஸ்ரீரங்கம், மதுரை, இராமேசுவரம், திருநெல்வேலி இவ்வூர்களில் எழுப்பப்பட்டுள்ள கோயில்கள் உலகப் புகழ் பெற்றவை.

இந்து மதத்தில் மக்களின் வயதுக்கும், அனுபவத்துக்கும் ஏற்றவாறு கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனினும் அன்பு நெறியே இதன் அடிப்படை ஆகும். உயிர்களிலெல்லாம் கடவுள் கலந்திருக்கிறார்; ஆகையால் உயிர்களுக்குக் காட்டும் அன்பே கடவுளுக்குக் காட்டும் அன்பாரும்; ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைத் தவறாமல் செய்துவர வேண்டும்; கடவுளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்; அவர் புகழைப் பாட வேண்டும்; ஆசை, கோபம், வெறுப்பு இல்லாத நல்வாழ்வு வாழ்ந்து வந்தால், நாம் இறுதியில் இறப்பு பிறப்பு என்னும் துன்பத்திலிருந்து விடுதயைடைவோம்; கடவுளின் திருவருள் கிடைக்கும்; நல்லவை செய்தால் நல்லது விளையும்; தீயவை செய்தால் தீமையே உண்டாகும்; அவரவர்கள் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றவாறு மனிதர்கள் மீண்டும்மீண்டும் பிறவிகள் எடுப்பார்கள். இவை இந்து மதத்தின் சிறப்பான கொள்கைகளாகும். இந்து மதத்தின் சிறப்பையும், அதன் சிறந்த கொள்கைகளையும் சுவாமி விவேகாநந்தர் (த.க.) போன்றோர் உலகெங்கும் சென்று எடுத்துக் கூறியுள்ளனர். பார்க்க: ஆழ்வார்கள்; இராமானுசர் ; சங்கரர் ; சைவம்; நாயன்மார்கள்; வைணவம்.

இந்துஸ்தானி இசை: உலகில் பலவிதமான இசை வகைகள் வழங்கி வருகின்றன. இந்தியா முழுவதிலும் 700 ஆண்டுகளுக்கு முன்புவரை பொதுவாக ஒரே வகையான இசைதான் இருந்து வந்தது. பின்னர் இது இருவகையாகப் பிரிந்தது. ஒன்று தென் இந்தியாவில் சிறப்புற்று விளங்கும் கருநாடக இசை (த.க.): மற்றொன்று வட இந்தியாவில் சிறப்புற்றிருக்கும் இந்துஸ்தானி இசை.

இந்துஸ்தானி இசைக்கும் கருநாடக இசைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்துஸ்தானி இசையில் இப்பொழுது சுமார் 200 இராகங்கள் உள்ளன.

இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்காகப் பல இசைக்கருவிகள் (த.க.) உள்ளன. அவற்றுள் சித்தார், சரோடு, ஷனாய், தபலா, டோலக் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பார்க்க : இசைக் கருவிகள்; கருநாடக இசை.


இந்தோனீசியா: இந்தோனீசீயா ஒரு விசித்திரமான நாடு, பெரிதும் சிறிதுமாகச் சுமார் 3,000 தீவுகள் அடங்கியது. இத்தீவுகளுள் சமத்ரா, ஜாவா, போர்னியோ, செலிபீஸ், பாலி, மொலக்கஸ் முதலியன முக்கியமானவை. மற்றவை மிகச் சிறியவை. தேசப்படத்தைப் பார்த்தால் இந்தத் தீவுகள் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் படிக்கற்கள்போல அமைந்திருப்பது தெரியும். கிழக்கு மேற்காக இந்த நாட்டின் நீளம் 4,800 கி.மீ. பரப்பளவு சுமார் 14,95,000 சதுர கி.மீ. இந்தோனீசியா மலைகள் நிறைந்த நாடு. இவற்றுள் பல எரிமலைகள். உலகத்து எரி மலைகளில் பாதி இங்குள்ளன. இந்நாடு பூமத்தியரேகைப் பிரதேசத்தில் உள்ளது ஆகையால் இங்கு வெப்பமும் மழையும் அதிகம். எனவே பலவகை மரங்களும், செடி கொடிகளும் நிறைந்த அடர்ந்த காடுகள் இங்கு உள்ளன. இக்காடுகளில் புலி, காண்டாமிருகம், யானை, குரங்கு, மான் முதலியவை வாழ்கின்றன.

இந்தோனீசியாவில் நெல், புகையிலை, கரும்பு, சோளம், சின்கோனா, ரப்பர், தேயிலை முதலியவை ஏராளமாக விளைகின்றன. பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகளும் அதிகம் உள்ளன. வெள்ளீயம், நிலக்கரி, அலுமினியம் முதலிய தாதுப்பொருள்களும் கிடைக்கின்றன. இந்தோனீசீயா