பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒளி 87


ஒலிவமரம்

ஊறுகாய் போடுவார்கள். இதன் பழத்தைத் தின்னலாம். ஒலிவ மரப் பழத்திலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். ஒலிவ எண்ணெய் சத்து நிறைந்தது. மற்ற எண்ணெய்களைவிட உயர்ந்தது. சமையலுக்கும், மருந்துகள் செய்யவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது. இதை உடம்பில் பூசிக் குளிப்பதுண்டு. சற்று மட்டரக எண்ணெயிலிருந்து சோப்பு முதலிய வாசனைப்பொருள்கள் செய்கிறார்கள்.

ஒலிவ மரம் உறுதியானது. இதைக் கொண்டு அழகான மரச்சாமான்கள் செய்கிறார்கள். ஒலிவ மரம் பல நூறு ஆண்டுகளானாலும் பட்டுப்போகாது. ஐரோப்பாவில் பழங்காலத்தில் ஒலிவமரத்தின் சிறு கிளையைச் சமாதானத்தின் அறிகுறியாகக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் உலகப்படத்தைச் சுற்றிச் சமாதானத்தின் சின்னமாக ஒலிவ மரத்தின் கிளை சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒலிம்ப்பிக் (த.க.) விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒலிவ மரத்தின் கிளையைப் பரிசாக அளிப்பது அக்கால வழக்கம்.


ஒளி :ஓர் இருட்டு அறைக்குள் சென்றால் நாம் எதையும் பார்க்க முடியாது. ஒளி இருந்தால்தான் அந்த அறையில் உள்ள பொருள்கள் நமக்குத் தெரியும். பொருள்களை நாம் பார்க்க உதவுவது ஒளி. பொருள்களின்மீது பட்ட ஒளி திரும்பிவந்து நம் கண்களை அடைவதைத் தான் நாம் பார்த்தல் என்கிறோம்.

சூரியன், நட்சத்திரங்கள், விளக்குச் சுடர், பழுக்கக் காய்ச்சிய இரும்பு, மின்மினிப் பூச்சி ஆகியவை தாமாகவே ஒளி வீசுகின்றன. இவற்றுக்கு ஒளிரும் பொருள்கள் என்று பெயர். தாமாகவே ஒளிரும் தன்மை இல்லாத பொருள்களுக்கு ஒளிராப் பொருள்கள் என்று பெயர். சூரிய ஒளியோ, விளக்கு ஒளியோ இல்லாவிட்டால் நாம் இவற்றைப் பார்க்க முடியாது. காகிதம், பேனா, செடி கொடிகள், மேசை போன்ற பல பொருள்கள் ஒளிராப் பொருள்களாகும். சந்திரனும் ஓர் ஒளிராப் பொருளே. ஆனாலும் இரவில் சந்திரன் ஒளி வீசுகிறது. இது எப்படி? சூரியனிடமிருந்து செல்லும் சூரிய ஒளி சந்திரன்மேல் பட்டுப் பிரதிபலிக்கிறது. இதுதான் சந்திர ஒளி. ஒளி ஒரு பொருளின்மேல் பட்டுத் திரும்புவதற்குப் பிரதிபலித்தல் என்று பெயர்.

சன்னல் வழியேவரும் சூரிய ஒளியின் எதிரே முகம் பார்க்கும் கண்ணடி ஒன்றைப் பிடித்தால், கண்ணாடியில் பட்ட ஒளி பிரதிபலித்து எதிரில் உள்ள சுவரின் மீது விழுகிறது. கண்ணாடி மட்டுமல்ல, பளபளப்பான பொருள்கள் எல்லாமே ஒளியை நன்கு பிரதிபலிக்கும். இவற்றின் பரப்பு வழுவழுப்பாக இல்லாவிட்டால் ஒளி சீராகப் பிரதிபலிக்காது. கரடு முரடான பரப்பானது ஒளியைப் பல திசைகளில் பரப்பிவிடும். தண்ணீரும் ஒளியைப் பிரதிபலிக்கும்.

ஒளிக்கதிர்கள் நேர்க் கோட்டிலேயே செல்கின்றன; வளைந்து செல்வதில்லை. காமிராவின் எதிரில் உள்ள ஒரு பொருளின் பிம்பம் காமிராவின் திரையில் தலைகீழாகத் தெரிவதற்குக் காரணம், ஒளி நேர்க்கோட்டில் செல்வதேயாகும். ஓர்அட்டைப் பெட்டியின் அடிப்பாகத்தில் ஊசியால் ஒரு துளை குத்துங்கள். பெட்டியின் மூடியைக் கிழித்துவிட்டு அதற்குப் பதில் மெல்லிய காகிதத்தையோ ஒரு எண்ணெய்க் காகிதத்தையோ ஒட்டுங்கள். துளையை எதிரில் உள்ள ஒரு வீட்டை நோக்கித் திருப்பினால் எதிர்ப் பக்கத்திலுள்ள எண்ணெய்க் காகிதத்தின்மேல் வீட்டின் பிம்பம் தலைகீழாக விழுவதைப்பார்க்கலாம்.

கண்ணுக்கு எதிரே ஒரு புத்தகத்தை நிறுத்தினால் அப்புத்தகம் அதற்குப் பின்புறமுள்ள பொருள்களை மறைத்துவிடுகிறது. ஆனால் புத்தகத்துக்குப்பதில் ஒரு கண்ணாடியை நிறுத்தினால் அப்பொருள்கள் எல்லாவற்றையும் கண்ணாடி வழியாக நாம் பார்க்க முடிகிறது. ஒளியைக் கண்ணாடி தடை செய்யவில்லை. ஒளி கண்ணாடியின் வழியே ஊடுருவிச் செல்கிறது. கண்ணாடியைப் போலவே தண்ணீர், காற்று, வெற்றிடம் முதலியவற்றின் வழியே ஒளி ஊடுருவிச் செல்லும். கண்ணாடி, தண்ணீர் முதலியவற்றுக்கு ஒளி ஊடுருவும் பொருள்கள் என்று பெயர். மரம், கல், சுவர் ஆகியவற்றின் மூலமும் இரும்பு போன்ற-