பக்கம்:சிதறல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

உதய ஞாயிறு போல் தோன்றி ஒளிவிடும் என் ரவி எனக்கு வாழ்க்கையில் ஒளி தந்தான். மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன். அந்த மகாகவியின் வார்த்தைகளை

"கன்னிமை என்பது பிச்சைப் பாத்திரம்
தாய்மை என்பது அட்சயப் பாத்திரம்"

நான் என் வாழ்க்கைக்காக அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் காதல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நரம்பில் ஒசை எழுப்புவதற்காக அது மீட்டப்படுகிறது. அந்தக் கானம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால் அதை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அந்த நரம்புகள் சில சமயம் அறுந்து விடுகின்றன. அறுந்த நரம்புகள் மறுபடியும் கட்டப்பட வேண்டும். அதை யார் கட்டுவது.

ரவியின் விளையாட்டில் நான் என் கவலைகளை மறப்பேன். கவலை என்பது என்ன? முடிவு செய்ய முடியாததுதான். நம் லட்சியப் பாதை எது என்று வகுத்துக் கொள்வதில் தான் போராட்டமே ஏற்படுகிறது. மற்றவர்கள் இந்தப் போராட்டத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. அதனால் அவர்கள் நிம்மதியாக எப்படியோ வாழ்கிறார்கள் ஆனால் அவர்களால் சுற்றுப்புறம் சுகப்படுவது இல்லை. அவர்கள் சுகப்படுகிறார்கள்.

கவிதைப் பயித்தியம் என்ற ஆசிரியர் ஒருவரைக் குறிப்பிட்டேனே அவரை நான் மறக்க முடிவதில்லை. கவிஞனுக்கு வேண்டிய லட்சிய வெறி அவர் பார்வையில் கிடந்தது. நான் தவறாகக் கணித்தேன். அவர் வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாது என்றும் இப்படிக்கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று நான் அந்தக் காலத்தில் எண்ணிப் பார்த்ததே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/52&oldid=1285026" இலிருந்து மீள்விக்கப்பட்டது