பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நடத்தினோம். பார்ப்பனரானாலும் சர் ஆர். எஸ். சர்மா, தமது பங்களாவில் முழு உரிமை தந்து, உணவு வசதிகளும் எல்லாருக்குமே செய்து, சில நாட்கள் வகுப்புகள் நடைபெற அழைப்பும், ஒத்துழைப்பும் தந்தார். இதைக் கருணாநிதி கண்டித்துப், பெரியார் பார்ப்பனர் வலையில் வீழ்ந்து விட்டார், என்று பேசினார். இதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் அவர் என்னைக் குறை கூறிப்பேசியது கிடையாது” என்றார் பெரியார்.

ஒரு வாரமாகச் சமாளித்துப் பார்த்து, இயலாமற் போய்ச் சென்னை சென்று, பொது மருத்துவ மனையில் சேர்ந்துவிட்டார் பெரியார். 18-ந்தேதி வீரமணியின் அறிக்கை “விடுதலை” முதற்பக்கத்தில் வெளியாயிற்று:- பெரியாருக்கு ஹெர்ணியா வளர்ச்சி ஏற்பட்டு, நீர் இறங்குவதில் நோயும், மூலத்தில் கோளாறும் உண்டாகி, ஒரு வாரம் கஷ்டப்பட்டுப், பிறகு சென்னை வந்ததில், 15 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் பொது மருத்துவமனையில், என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவிட்டனர். அதனால், ஏற்கனவே பெரியார் ஒத்துக்கொண்ட சுமார் பத்து நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்ளுவதோடு, அவற்றுக்காகப் பெற்றுக் கொண்ட பணத்தையும் திருப்பி அனுப்பச் சொல்லியிருக்கிறார் என்பதாக.

இந்த வயதில் ஆப்பரேஷன் தேவையில்லை, எப்படியும் நோயைக் குணப்படுத்தலாம் என்றே டாக்டர்கள் முயன்றனர். 21-ந்தேதி காலையில் வந்த செய்திப் பத்திரிகைகளிலிருந்து, வீரமணி ஒரு செய்தியைப் படித்துக் காண்பித்ததும், படுத்துக் கிடந்த பெரியார் வாரிச் சுருட்டி எழுந்து உட்கார்ந்து, மிகுந்த மகிழ்ச்சியுடன், “இந்த அன்பான சேதியினால் எனக்குத் தொல்லை அதிகம் ஏற்படலாம் என்ற போதிலும், எனக்குப் பெருமளவுக்கு வலியை இது குறைத்து விட்டது" என்றார் பெரியார்.

அப்படி என்ன செய்தி அது? 20.6.67 சட்டமன்றத்தில், தி.மு.க. உறுப்பினர் ஒருவர், “பெரியாருக்குத் தியாகிகள்“ பென்ஷனும், மான்யமும் வழங்கப்படுமா?” என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்ணா , “இந்த அமைச்சரவையையே அவருக்குக் காணிக்கையாகக் கொடுத்திருக்கிறோமே?" என்றார்.

“விடுதலை” அன்றாடம் பெரியாரை வந்து பார்த்த பிரமுகர்கள் பெயரை வெளியிட்டு வந்தது. சுகாதார அமைச்சர் சாதிக் பாட்சா திடீரென்று வந்து பார்த்தார். அமைச்சர்கள் ஏ.கோவிந்தசாமி, நாவலர் நெடுஞ்செழியன், மா.முத்துசாமி ஆகியோரும் பார்த்து விசாரித்தவர். 30.6.67 இரவு 7.30 மணிக்கு முதலமைச்சர் உயர்திரு சி.என். அண்ணாதுரை வந்து பார்த்து விசாரித்தார். மற்றும் திருவாளர்கள்