பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

439


எம்.ஜி. ராமச்சந்திரன், ம.பொ.சி. சம்பத், ஏ.எஸ்.கே., பேளுக்குறிச்சி சோமசுந்தரம், நடிகர் அசோகன், அன்பில் தர்மலிங்கம், வி.வி.இராமசாமி, என். வி. நடராசன், ஜி.டி. நாயுடு, இலக்குவனார். து.ப. அழகமுத்து, நாகசுந்தரம், மதுரை முத்து, ஏ.பி. சனார்த்தனம், க. ராஜாராம், டி. எம். பார்த்தசாரதி, எஸ். இராமநாதன், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரும், கழகத் தோழர்கள் பலரும் வந்து, பெரியார் உடல் நலம் விசாரித்துச் சென்றனர்.

ஆனைமலை ஏ.என். நரசிம்மன் பி.ஏ., 2.7.67 அன்று இயற்கை எய்தினார். பெரியார் உடனே ஆனைமலை செல்ல வேண்டுமென்று துடித்தார். டாக்டர்கள் அனுமதிக்க அடியோடு மறுத்துவிட்டனர்! அதனால், மணியம்மையாரும் போக முடியவில்லை! 3-ந்தேதி “விடுதலை”யில் பெரியார் எழுதினார் - கழகத்தின் கண் போன்ற தோழர், எவ்வளவோ செல்வக் குடும்பத்தில் பிறந்தும், துறவிபோல், என்னிடம் உண்மை அன்பு வைத்து, என்னோடு சுற்றிக் கொண்டிருந்தார். அருமை நண்பர். அனைவரும் பின்பற்றத்தக்க மனிதர் (Exemplary), என்று .

முன்னாள் அமைச்சர்களில், நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றும், சட்ட மன்ற மேலவை உறுப்பினர் பதவியை விடாமல் வைத்திருந்த ஆர். வெங்கட்ராமன்,

‘கலப்புமணத் தம்பதிகளைப் பாராட்டித் தங்கப்பதக்கம் வழங்குவது தேவையற்றது; சமூக விஷயங்களிலெல்லாம் அரசு தலையிடக்கூடாது‘, என்று அறிவுரை கூறித், தம்மை இன்னாரென்று காட்டிக் கொண்டார்! அலுவலகங்களிலும், நீதிமன்றங்களிலும், படிப்படியே தமிழ் நடைமுறைக்கு வரும் என்று, அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கருணாநிதி, மதியழகன் ஆகிய அமைச்சர்களின் மான்யக் கோரிக்கைகள், ஏ.கோவிந்தசாமி, மா.முத்துசாமி ஆகிய அமைச்சர்களின் சுற்றுப் பயணத்திட்டங்கள் இவையெல்லாம் விடுதலை’யில் இடம் பெறத் தொடங்கின. சென்னையில் குடிசைப் பகுதிகளில் தொடர்ந்து தீவிபத்துகள் நடைபெற்று வந்தன. 15.7.67 அன்று காமராசரின் 65-ஆவது பிறந்த நாள், காமராசர் நீழே வாழ்க என்று ’விடுதலை' முதல் பக்கம் வாழ்த்தியிருந்தது. திருச்சியில் 17.9.67 அன்று பெரியார் சிலையைத் திறக்கக் காமராசர் ஒத்துக் கொண்டதாகவும், அடிபீடம் தயாரென்றும் 6.7.67 அன்று, சிலை அமைப்புக் குழுவின் செயலாளர் நோபில் கோவிந்தராஜுலு அறிவித்தார்,

பொது மருத்துவமனையிலிருந்து 4.7.67 அன்று பெரியார் வீடு திரும்பி, 9-ந்தேதி தர்மபுரி திருமணத்துக்குச் சென்று, அப்படி 3, 4 நிகழ்ச்சிகளுக்கும் செல்லத் தொடங்கினார். ஆனால், மீண்டும் உடல்