பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

மக்சீம் கார்க்கி


என்று கருதினாள். வேவுகாரர்கள் அவளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போனார்கள்; எனவே அவள் மீது அவர்கள் அத்தனை சிரத்தை காட்டவில்லை. எத்தனையோ தடவைகளில் அவர்கள் அவளைச் சோதனை போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சோதனை போடும் நாளெல்ளாம் தொழிற்சாலைக்குள் அந்தப் பிரசுரங்கள் தலைகாட்டிப் பரவித் திரிந்த நாளுக்கு மறுநாளாகவே இருந்து வந்தது. அவளிடம் எந்தவிதமான பிரசுரங்களும் இல்லாத நாட்களில் அவள் வேண்டுமென்றே காவல்காரர்களைத் தன்மீது சந்தேகங் கொள்ளுமாறு தானே தூண்டிவிட்டுவிடுவாள். அவர்கள் அவளைப் பிடித்துச் சோதனை போடுவார்கள். அதுதான் சமயம் என்று அவள் அவர்களோடு வாதாடித் தன்னை அவர்கள் இழிவுபடுத்திவிட்டதாகப் பாவனை செய்துகொள்வாள். அவர்களை அவமானப்படுத்தி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு அகன்று செல்வாள் அவள். தன்னுடைய சாமர்த்தியத்தை எண்ணித் தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வாள். இது அவளுக்கு ஒரு ஆனந்த மயமான விளையாட்டுப்போல இருந்தது.

நிகலாய் வெஸோவ்ஷிகோவை தொழிற்சாலையில் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. உத்திரக்கட்டைகள், விறகு, பலகைகள் முதலியனவற்றை ஏற்றுமதி செய்யும் ஒரு மர வியாபாரியிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். அநேகமாக ஒவ்வொரு நாளும் அவன் மரங்களைப் பாரமேற்றிக்கொண்டு செல்வதை தாய் பார்த்துத்தான் வந்தாள். முதலில் நாஞ்சான் பிறவிகளான ஒரு ஜோடிக் கறுத்த குதிரைகள் வரும். அந்தக் குதிரைகள் தமது பஞ்சடைந்து நொந்துபோன கண்களைத் திருகத் திருக விழித்துக்கொண்டு தலைகளை அசைத்து அசைத்து வரும். உழைப்பினால் ஓய்ந்துபோன அவற்றின் கால்கள் வெடவெடத்து நடுங்கும். குதிரைகளை அடுத்து, பச்சை மரக்கட்டைகளாவது, அறுத்தெடுத்த பலகைகளாவது ஒன்றோடொன்று மோதியவாறு தரையில் தேய்ந்தபடி வந்துகொண்டிருக்கும். அந்தப் பக்கத்தில் நிகலாய் வருவான். அவனது கைகள் குதிரைகளின் லகானை வெறுமனே பிடித்துக்கொண்டிருக்கும். நிகலாயின் கால்களில் கனத்த பூட்சுகள் இருக்கும், தொப்பி தலைக்குப் பின்னால் தள்ளிப் போயிருக்கும். மேலும் அவனது ஆடையணிகளும் கிழிந்து பழங்கந்தலாய்ப் போயிருக்கும். உடையெல்லாம் ஒரே புழுதிபடிந்து, தரைக்குள்ளிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணடைந்து அலங்கோலமாய்த் தோன்றும் தடித்த முண்டுக் கட்டையைப் போலத் தோன்றுவான் அவன். அவனும்