பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

167


அந்தக் குதிரைகளைப் போலவே தலையைத் தொங்கப்போட்டு அசைந்தாடிக் கொண்டு தரையையே பார்த்தவாறு செல்வான். அவனது குதிரைகள், கண்மூடித்தனமாக எதிரேவரும் ஆட்கள் மீதாவது வண்டிகள் மீதாவது சாடி விழுந்து தடுமாறும். அந்த ஜனங்கள் நிகலாயைப் பார்த்து உரத்துக் கூச்சலிடுவார்கள். மானாங்காணியான வசை மொழிகள் குழவிக் கூட்டத்தைப் போல அவனை மொய்த்துப் பிடுங்கும். அவன் அவற்றுக்கு எந்தப் பதிலும், சொல்வதில்லை. நிமிர்ந்தும் பார்ப்பதில்லை, வெறுமனே உரத்துக் கூச்சலிட்டுத் தன் குதிரைகளை முடுக்குவான்;

“போ, முன்னே !”

வெளிநாட்டிலிருந்து புதிதாக வந்த ஒரு பத்திரிகையையோ புத்தகத்தையோ வாசித்துக் காட்டுவதற்காக, அந்திரேய் சமயங்களில் எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து வருவதுண்டு. அந்தச் சமயங்களில் நிகலாயும் வருவான்; வந்து ஒரு மூலையிலே சென்று உட்காருவான். ஒரு மணியோ, இரண்டு மணியோ, அவன் அப்படியே வாய் பேசாது உட்கார்ந்து வாசிப்பதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பான், வாசித்து முடிந்தவுடன். அந்த இளைஞர்கள் காரசாரமான விவாதங்களில் இறங்குவார்கள். அவற்றில் நிகலாய் பங்கெடுத்துக் கொள்வதேயில்லை. எல்லோரும் சென்ற பிறகு அவன் மட்டும் பின்தங்கி அந்திரேயோடு தனிமையில் பேசுவான்.

‘யாரை அதிகமாகக் குறை கூறுவது?” என்று துயரத்துடன் கேட்பான்.

“குறை கூற வேண்டிய மனிதர்களில் முதன்மையானவன் யார் தெரியுமா?” ‘இது என்னுடையது’ என்று எவன் முதன் முதல் சொன்னானோ, அவன்தான். அந்தப் பயல் செத்துப்போய் எத்தனை ஆயிரம் வருஷங்களோ ஆகிவிட்டன. இனி அவன்மீது நாம் பாய்ந்து விழ முடியாது” என்று வேடிக்கையாகப் பதில் சொன்னான் ஹஹோல். எனினும் அவனது கண்களில் உற்சாகம் இல்லை. நிலைகொள்ளாமல் அவை தவித்தன.

“பணக்காரர்கள்? அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் கூட்டத்தார்? அவர்கள் மட்டும் ஒழுங்கானவர்களா?”

அந்திரேய் தன் தலை மயிரை விரல்களால் உலைத்துவிட்டு கொண்டிருந்தான். வாழ்க்கையைப் பற்றியும், மாந்தர்களைப் பற்றியும் விளக்கமான முறையில் விவரித்துச் சொல்வதற்குரிய எளிய வார்த்தைகளைப்பற்றி யோசித்தவாறே மீசை முனையை இழுத்து