உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

மக்சீம் கார்க்கி


ரத்தம் உறிஞ்சப்படும் வர்க்கம்தானே. அவர்களையும் மனிதர்களாகக் கருதுவதில்லை. உலகம் அப்படியிருக்கிறது. ஒரே மாதிரி இருக்கிறது! ஆனால் அந்த முதலாளிகளோ ஜனங்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை மூட்டிவிடுகிறார்கள். பயத்தினாலும், அறிவின்மையாலும் ஜனங்களின் கண்களைக் குருடாக்கி, கையையும் காலையும் தளையிட்டுக் கட்டி, மக்களைக் கசக்கிப் பிழிந்து ரத்தத்தை உறிஞ்சித் தீர்க்கிறார்கள். மக்களை ஒருவருக்கொருவர் உதைக்கவும், நசுக்கவும் தூண்டிவிடுகிறார்கள்; அவர்கள் மக்களைத் துப்பாக்கிகளாகவும், குண்டாந்தடிகளாகவும், கற்களாகவும் உருமாற்றி, ‘பார்! இது தானடா அரசு! என்று கூறுகிறார்கள்.”

அவன் தன் தாயருகே சென்றான்; பிறகு பேசினான்;

“அது மகா பாவம், அம்மா! லட்சோப லட்ச மக்களைக் கொன்று குவிக்கும் பஞ்சமாபாதகப் படுகொலை! மனித இதயங்களைக் கொன்று தள்ளும் கோரக் கொலை... நான் சொல்வது புரிகிறதா, அம்மா? அவர்கள், இதயங்களைக் கொல்லும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள்! அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? நாம் ஒருவனைத் தாக்கினால், அதை எண்ணி வருந்துகிறோம், வெட்கப்படுகிறோம்; நாம் அனைவருமே அப்படிப்பட்ட செயலை அருவருத்து வெறுத்துத் தள்ளுகிறோம். ஆனால் அவர்களோ ஆயிரக்கணக்கான மக்களை அமைதியாக, ஈவிரக்கமற்று. ஈர நெஞ்சமற்று, வேதனையற்று — சொல்லப் போனால் பரிபூரணமான இதய திருப்தியோடு — கொன்று தள்ளுகிறார்கள்! அவர்கள் ஜனங்களைக் கசக்கிப் பிழிந்து உயிரைப் பருகுவதற்குரிய ஒரே காரணம் என்ன தெரியுமா? தங்களது தங்கத்தையும், வெள்ளியையும், சொத்து சுகங்களையும் பாதுகாப்பதற்காக, நம்மீது அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை ஆட்சியை நிலைக்கவைக்கும் சகல சட்ட திட்டங்களையும் பாதுகாத்துப் போற்றி வளர்ப்பதற்காகவேதான். அம்மா, நீ இதைக் கொஞ்சம் யோசித்துப்பார். மக்கள் குலத்தைக் கொன்று குவிப்பதும், மக்கள் குலத்தின் இதயங்களைச் சின்னாபின்னப்படுத்துவதுமான காரியத்தை அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள்? தங்கள் இனத்தையோ தங்கள் உயிரையோ பாதுகாப்பதற்கான தற்காப்பு முயற்சி அல்ல அது! ஆனால், தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர்கள் இப்படிப்பட்ட கோரக் கொலையில் ஈடுபடுகிறார்கள். தங்கள் இதயத்துக்குள்ளே இருப்பதை அவர்கள் பாதுகாக்க விரும்பவில்லை. இதயத்துக்கு வெளியேயுள்ள பொருள்களைத்தான் அவர்கள் காப்பாற்ற எண்ணுகிறார்கள்...”