பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

201


அவன் அவளது கரங்களை எடுத்து, அவற்றை அழுத்திப்பிடித்தவாறு பேசினான்:

“நீ மட்டும் இந்தச் செய்கையிலுள்ள கசப்பையெல்லாம் உணர்ந்துவிட்டால், இந்தச் செய்கையின் வெட்ககரமான கேவல் நிலையை உணர்ந்துவிட்டால், நாங்கள் எந்த சத்தியத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை லகுவில் புரிந்துகொள்வாய். அந்தச் சத்தியம் எவ்வளவு மகத்தானது, புனிதமானது அருமையானது என்பதையும் நீ கண்டு கொள்வாய்!”

தாய் உணர்ச்சி வசப்பட்டு எழுந்தாள், தனது இதயத்தையும் தன் மகனது இதயத்தையும் ஒன்றாக்கி ஒரே ஜோதியாக, பிரகாசமான ஏக ஜோதிப் பிழம்பாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை அவள் மனத்தில் நிறைந்து நின்றது.

“கொஞ்சம் பொறு. பாவெல்” என்று சிரமத்தோடு முனகினாள் அவள், “என்னால் அதை உணர முடியும்..... கொஞ்சம் பொறுத்திரு”

25

வாசல் புறத்தில் யாரோ திடீரென வருவது கேட்டது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்து ஒருவரையொருவர் திருகத் திருகப் பார்த்துக்கொண்டனர்.

கதவை மெதுவாகத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் ரீபின்.

“வந்துவிட்டேன்!” என்று புன்னகையோடு தலைநிமிர்ந்து சொன்னான் ரீபின்; “அங்கும் இங்கும் எங்கும் போனான் தாமஸ்; ஆடியோடித் திரும்பி வந்தான் தாமஸ்!”[1]

அவன் ஒரு கம்பளிக் கோட்டு போட்டிருந்தான். அதன் மீது தார் எண்ணெய் படிந்திருந்தது. காலிலே ஒரு ஜோடி கட்டைப் பாதரட்சைகள்; தலையிலே ஒரு கம்பளித் தொப்பி, அவனது இடைவாரிலே இரண்டு கையுறைகள் தொங்கிக்கொண்டிருந்தன.

“உடல்நலம் எப்படி? பாவெல், உன்னை விடுதலை பண்ணிவிட்டார்களா? ரொம்ப நல்லது. என்ன பெலகேயா நீலவ்னா செளக்கியமாயிருக்கிறாயா?” அவன் தன் வெள்ளைப் பல்லெல்லாம் தெரிய இளித்துச் சிரித்தான். அவனது குரல் முன்னைவிடக் கனிந்திருந்தது. அவனது முகத்தில் அளவுக்கு மீறி தாடி வளர்ந்து மண்டியிருந்தது,


  1. இது ஒரு பாட்டு மாதிரியான பழமொழி: ‘போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு’ என்ற நம் நாட்டு வழக்கை ஒத்திருப்பது.–மொ—ர்.