பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

மக்சீம் கார்க்கி


“அம்மா, போய் அந்தப் புத்தகங்களை வாங்கி வருகிறீர்களா? அங்குள்ளவர்களுக்கு எந்தப் புத்தகங்கள் என்பது தெரியும். நாட்டுப்புறத்துக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்கள் என்று மட்டும் சொன்னால் போதும்” என்று சொன்னான் பாவெல்.

“அதற்கென்ன? தேநீர் கொதித்து முடிந்தவுடன் உடனே போகிறேன்” என்றாள் தாய்.

“என்ன பெலகேயா நீலவ்னா,. இந்த விவகாரத்தில் நீயும் கலந்துவிட்டாயா?” என்று கேட்டுச் சிரித்தான் ரீபின்; “ஹும். அங்குள்ள ஜனங்களில் எத்தனையோ பேருக்குப் புத்தகங்கள் தேவை. படிக்க வேண்டும் என்ற ஆர்வம். உள்ளூரில் ஓர் உபாத்தியாயர் இருக்கிறார். இது அவருடைய வேலை. ரொம்ப நல்லவர். அவரும் தேவாலய குருக்கள் வழியில் வந்தவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் ஓர் உபாத்தியாயினியும் இருக்கிறாள். ஆனால் அவர்கள் தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தொடுவதில்லை. வேலை போய்விடும் என்ற பயம். ஆனால், எனக்கு அந்தத் தடை பண்ணப்பட்ட புத்தகங்கள்தான் தேவை. கொஞ்சம் காரசாரமான புத்தகங்கள்தான் நல்லது. நான் அவற்றைப் பையப்பைய அவர்கள் மத்தியில் பரப்பிடுவேன். போலீஸ்காரரோ, தேவாலயக் குருக்களோ அந்தப் புத்தகங்களைக் காண நேர்ந்தால், என்னைக் குற்றம் கூறுவார்களா? அந்த உபாத்தியாயர்கள் பாடுதான் ஆபத்து. அதற்குள் நான் சமயம் பார்த்து ஒதுங்கியிருந்துவிடுவேன்.”

அவன் தனது புத்திசாலித்தனத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்,

“கரடிபோலப் பாவனை, குள்ள நரியைப்போல வாழ்க்கை ” என்று நினைத்தாள் தாய்.

“இந்த மாதிரிச் சட்ட விரோதமான புத்தகங்களைப் பரப்பியதாக உபாத்தியாயர்கள் மீது சந்தேகப்பட்டால், அவர்களைச் சிறையில் போடுவார்கள் என்று எண்ணுகிறீர்களா?” என்று கேட்டான் பாவெல்.

“நிச்சயமாய்ப் போடத்தான் போடுவார்கள் அதனால் என்ன?” என்றான் ரீபின்.

“ஆனால் குற்றவாளி நீங்கள்தான்; அவர்களல்ல. நீங்கள்தான் சிறைக்குப் போகவேண்டும்.”

“நீ ஒரு எமகாதகப் பேர்வழி!” என்று முழங்காலில் தட்டிக்கொடுத்துக்கொண்டு சிரித்துச் சொன்னான் ரீபின்; “என்னை யார் சந்தேகப்படுவது? முஜீக்குகள் இந்த மாதிரி விவகாரங்களில் ஈடுபட