பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

மக்சீம் கார்க்கி


அவர்களது உணர்ச்சிகளோ ஆழமும் உறுதியும் வாய்ந்தனவாயிருந்தன, இங்கோ, இவர்களது உணர்ச்சியோ வக்கிர புத்தி படிந்து, எதையுமே வெட்டிப் பேசுவதாக இருந்தது. இங்கு இவர்கள் பழமையைத் தகர்த்தெறிவதைப் பற்றித்தான் அதிகமாகப் பேசினார்கள், அவர்களோ புதுமையை உருவாக்குவதைப் பற்றியே அதிகமாகக் கனவு கண்டார்கள். இந்தக் காரணத்தினால்தான் அவளது மகனது பேச்சும் அந்திரேயின் பேச்சும் மிகுந்த ஆழம் பொருந்தியதாகவும், அவளுக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் இருந்தன.

தொழிலாளர்களிடமிருந்து யாரேனும் நிகலாயைப் பார்க்க வந்தால் அவன் அவர்களிடம் மெத்தனமாகவும் அநாயாசமாகவும் நடந்து கொள்வதையும் அவள் கண்டாள். அவனது முகத்தில் இனிமை ததும்பும் ஒரு நயபாவம் தோன்றும்; அவனும் ஏதோ இயற்கைக்கு மாறான மாதிரி அவர்களிடம் இஷ்டப்படியெல்லாம் சில நேரங்களில் கவனக்குறைவாகவும் சில நேரங்களில் கொச்சையாகவும் பேசுவான்.

“இப்படிப் பேசினால்தான் அவர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறான் போலிருக்கிறது என்று அவன் தனக்குள் நினைத்துக் கொள்வாள்.

ஆனால் இந்த எண்ணம் - மட்டும் அவளைத் திருப்திப்படுத்தவில்லை. அவனைப் பார்க்க வந்த தொழிலாளியும் அவனிடம் மனம் விட்டுப் பேசாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டே பேசுவதாக அவளுக்குத் தோன்றியது. சாதாரணத் தொழிலாளி குடும்பப் பெண்ணான அவளோடு எவ்வளவு லகுவாகவும் தாராளமாகவும் அந்தத் தொழிலாளி பேசினானோ, அதே மாதிரி நிகலாயிடம் அவன் மனம் விட்டுப்பேசக் காணோம். ஒரு தடவை நிகலாய் அந்த அறையை விட்டுச் சென்ற சமயத்தில் அவள் வந்திருந்த இளைஞனைப் பார்த்துப் பேசினாள்:

“நீ எதற்காகப் பயப்படுகிறாய்? நீ என்ன உபாத்தியாயரிடம் பாடம் ஒப்புவிக்கின்ற சிறுவனா? இல்லையே!”

அந்த இளைஞன் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

“பழக்கப்படாத இடத்தில் நண்டும் கூட முகம் சிவக்கும்.. என்ன இருந்தாலும், இவர் நம்மைப் போன்றவரில்லையே”.

சமயங்களில் சாஷா வருவாள். அவள் வந்தால் வெகுநேரம் தங்க மாட்டாள். சிரிப்பே இல்லாமல் வந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே அவள் எப்போதும் பேசுவாள். போகும்போது தாயிடம் மாத்திரம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் போவாள்.