பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

325


“பாவெல மிகலாய்லவிச் எப்படியிருக்கிறான்?”

“சௌக்கியமாய்த்தானிருக்கிறான்; சந்தோஷமாகத்தான் இருக்கிறான், எல்லாம் கடவுள் அருள்!”

“நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்” என்று சொல்லி விட்டு, உடனே மறைந்து விடுவாள் சாஷா.

ஒரு முறை. பாவெலை விசாரணை செய்யாமலே அவனை அதிக காலமாகக் காவலில் வைத்திருப்பதைப் பற்றி அவளிடம் தாய் புகார் கூறினாள். சாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை ; எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுகிப் பிசைந்து கொண்டன.

தாய்க்கு அவளிடம் அந்த விஷயத்தைச் சொல்லிவிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது;

‘அடி, கண்ணே, நீ அவனைக் காதலிப்பது எனக்குத் தெரியும்.”

ஆனால் அதைச் சொல்வதற்கு அவளுக்குத் துணிவில்லை. அந்தப் பெண்ணின் அழுத்தம் நிறைந்த முகமும், இறுகிய உதடுகளும், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக விஷயத்தைப் பற்றி மட்டும் பேசும் அவளது பேச்சும் தாயின் மனத்தில் எழும் அன்புணர்ச்சியை எதிர்த்துத் தள்ளின. எனவே அவள் பெருமூச்செறிந்தவாறே தன் கையினால் சாஷாவின் கையை அழுத்திப்பிடிப்பாள், தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்வாள்;

“அடி, என் கண்ணே! நீ ஒரு துர்ப்பாக்கியசாலி....”

ஒரு நாள் நதாஷா வந்தாள். வந்த இடத்தில் தாய் இங்கு வந்திருப்பதைக் கண்டு அவளுக்கு ஒரே பேரானந்தம். அவள் தாயை அணைத்து முத்தமிட்டாள். பிறகு திடீரென்று அமைதி நிறைந்த குரலில் பேசினாள்:

“என் அம்மா செத்துப்போனாள். பாவம், செத்துப் போனாள்....”

அவள் தன் தலையை நிமிர்த்திச் சிலுப்பிவிட்டு, கண்களை விருட்டென்று துடைத்துவிட்டுக்கொண்டு பேசினாள்.

‘பாவம்! அவளுக்கு இன்னும் ஐம்பது வயது கூட நிறையவில்லை அவள் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை விட, அவள் செத்துப்போனதே நல்லது என்றுதான் எனக்குப் படுகிறது. அவள் தன்னந்தனியாளாக, பக்கத்திலே யார் துணையுமின்றி யாருக்கும் தேவையற்றவளாக எப்போது பார்த்தாலும் என் தந்தையின் அதட்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளானவாறே வாழ்ந்தாள். இந்த மாதிரிப்