பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



118.

வெள்ளத்துள் நா வற்றிஆங்கு உன் அருள் பெற்றுத்
துன்பத்தின் நின்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்
விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத
களி எனக்கே

14

விள்ளக்கிலேன்-விலகும் ஆற்றலிலேன். நாவற்றி-நீர்மேல் மிதக்கும் ஒரு வகை பூச்சி. களியாத களி-இதுவரை அனுபவித்தறியாத ஆனந்தம்.

இப்பாடலின் முதலடி பலருக்கும் குழப்பத்தைத் தருவதாகும். நீர்ப்பெருக்குள்ள கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய ஒரு செய்தி இங்குப் பேசப்பெறுகிறது. 'நாவற்றி' என்பது நீரில் மிதந்து கொண்டே, இங்கும் அங்கும் திரியும் ஒரு பூச்சியின் (எட்டுக்கால் பூச்சி போன்றது) பெயராகும். நாள் முழுவதும் நீரின்மேல் மிதந்தாலும் இந்த நாவற்றிப் பூச்சி நீரினால் எப்பயனையும் அடைவதில்லை.

இந்த உவமையைக் கூறுவதன் மூலம், கருணைக் கடலுள் புகுமாறு வாய்ப்பளித்துங்கூடத் தாம் அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விளக்குகிறார்.

அருளை நன்கு பயன்படுத்திக் கொள்வதாவது உலகத் துன்பங்களிலிருந்து விடுபடுதலாகும்.

‘நாவற்றி' என்பதைப் பூச்சியின் பெயராகக் கொண்டால் 'ஆங்கு' என்ற உவம உருபு பெயரோடு பொருந்தாமையின், நாவற்றி அலைந்தாங்கு என்று ஒரு சொல் வருவித்து பொருள் கொள்ள வேண்டும்.