பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 147


இப்பாடலில் ‘வெள்ளம்’ என்பது அருளுக்கு உவமையாயிற்று. நாவற்றிப் பூச்சி அடிகளாருக்கு உவமையாயிற்று. நாவற்றிப் பூச்சி வெள்ளத்தில் மிதந்தும் அதன் பயன் கொள்ளாமை, அருள் வெள்ளத்தில் புகுந்தும் துன்பம் நீங்குதலாகிய பயன் கொள்ளாமைக்கு உவமையாயிற்று.

119.

களிவந்த சிந்தையொடு உன் கழல்
     கண்டும் கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய்
     மெய்ச்சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
எளிவந்த எந்தை பிரான் என்னை
     ஆளுடை என் அப்பனே 15

ஒளிவந்த-ஒளிமிகுந்த , ஒளியைத் தந்த எனினுமாம்.

‘ஐயனே! உன் திருவடிகள் இரண்டையும் இரண்டு கண்களாலும் கண்டேன். அந்தக் கணமே என் சிந்தையில் இருந்த எண்ணங்களெல்லாம் மாறி, ஆனந்த பரவசம் (களி) நிரம்பிற்று. அப்படி நெஞ்சு முழுவதும் பரவசம் நிரம்பினாலும் அதனை முற்றிலுமாக அனுபவிக்க வேண்டுமானால் பொறிகளோடு கூடிய யாக்கையை விட்டிருக்க வேண்டும். காரணம், உடம்பு இருக்கின்ற வரையில் பொறி, புலன்கள், அந்தக்கரண்ங்கள் ஆகியவற்றின் சேட்டைகள் ஒரளவேனும் இருந்துகொண்டுதான் இருக்கும். அவை இருக்கின்ற வரை இன்ப அனுபவம் பூரணமாக நிரம்ப முடியாது’ என்றவாறு 'கலந்தருள வெளிவந்திலேன்' என்பதன் பொருள் இதுவாகும்.