உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நிலையும் நினைப்பும்


யாவில் மேதினத்தைப்பற்றி விழா கொண்டாடுவார்கள். ஒவ்வொன்றும் ஒரு வெற்றி விழாவாகும். அந்தந்த நாடும் அந்தந்த நாட்டு மக்களுமன்றி உலகமக்கள் அனைவரும் கொண்டாடும் திருநாளாகும். ஏன்? அந்த விழாக்கள் மக்களை அறியாமையிலிருந்தும், அடிமையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும், மீட்டு அறிவு, சுதந்திரம், சுகம் ஆகியவைகளை அடைய நடத்திய வீரப்போராட்டத்தைப் பற்றியும் போராட்டத்தில் கிட்டிய வெற்றியைப் பற்றியும், நினைவூட்டும் மகிழ்ச்சியான நாட்களாகும். இங்கு இம்மாதம் விநாயகசதுர்த்தி நடந்தது உங்களுக்குத் தெரியும் அந்த விழாவால் வீழ்ந்த நாடோ அல்லது சமுதாயமோ, மீண்டும் எழுந்து நடமாட வழியுண்டா? அந்த விழாவால் அறியாமை நீங்குவதைப் பற்றியோ அடிமை நீங்குவதைப் பற்றியோ மக்கள் கொள்ள வேண்டிய அவசியம் வற்புறுத்தப்படுகிறதா? இத்தகைய விழாக்களால் நாடு விமோசனமடைய மார்க்க முண்டா? இரண்டு விழாக்களைப் பற்றியும் ஒரே பத்திரிகையில் படிக்கிறார்கள். பிரஞ்சுப் புரட்சி பிரான்சு நாட்டில் கொண்டாடப்பட்டதையும் படிக்கிறார்கள். நம் நாட்டில் விநாயகசதுர்த்தி விழாக் கொண்டாடப்படுவதையும் படிக்கிறார்கள். யாராவது சிந்தித்தார்களா? ஏன் நம் நாட்டில் மாத்திரம் விழா இவ்வளவு மோசமான நிலையில் இருக்கவேண்டும் என்று, ஏன் சிந்திக்கவில்லை ? பாமரர்களிடம் படிப்பு இல்லை. படித்தவர்களிடம் பண்பு இல்லை. இன்று, சொல்லித்தரப்படுகிற பாடமுறையே மாற்றி அமைக்கப்படவேண்டும். சிந்தனையைக்