உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

போட்டுப் பேசினர். மதுவிலக்கு அமலுக்கு வந்தபோது ராயபுரத்தில் போய்ப் பேசினார்.

“நான் ஏன் சேலம் போன்ற தமிழக ஓரப் பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கிறேன் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். கிராமத்திலிருந்து வருபவர்களுக்குத் தெரியும். சாப்பிடுவதற்குக் கூழ் காய்ச்சி அதைச் சூடாகத் தட்டில் ஊற்றி வைத்தவுடன் சாப்பிடுபவன் முதலில் ஓரமாகத்தான் விரலால் தொட்டுப் பார்ப்பான். அதைப் போலவே மதுவிலக்கை அமல் படுத்துவதற்கு முதலில் ஒரமாக உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன்?” என்று சொன்ன உவமையை நான் இன்றும் கூட எண்ணிப் பார்த்து ரசிப்பதுண்டு.

தனி நபர் சத்தியாக்கிரகத்தின் போது ராஜாஜி எந்நேரமும் கைது செய்யப் படலாம் என்று ஒரு செய்தி பரவியது. அவ்வளவு தான்; ஆயிரக்கணக்கான் பேர் அவர் வசித்து வந்த பஸ்லுல்லா வீதியில் கூடிவிட்டனர். “காலை பத்து மணிக்கு அரெஸ்ட் பண்ணப் போருங்களாம்” என்று செய்தி பரவும். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ராஜாஜி கைதாக மாட்டார்! சாயங்காலம் இருக்கும் என்று கூட்டத்தினர் தாங்களாகவே பேசிக் கொண்டு போவார்கள். சாயங்காலத்துக்குள் மறுபடியும் திரும்ப வந்து காத்திருப்பார்கள். இப்படியே மூன்று நான்கு நாட்கள் ஒரே சஸ்பென்ஸாக இருந்தது.

இதைக் குறித்து ராஜாஜி சொன்னர் : “கிராமங்களில் வாழைத்தாரை அறுத்துப் பழுக்கப் போடுவார்கள். அதை ஒரு பானையில் வைத்து வைக்கோல் போட்டு மூடிவிடுவார்கள். தார் பழுக்க நாலைந்து நாட்கள் ஆகும். ஆனால் வீட்டிலிருக்கும் சின்னப் பயல்களுக்கு அதுவரை தாள முடியாது. அடிக்கொரு முறை உள்ளே போய் வைக்கோலே எடுத்துத் தார் பழுத்து விட்டதா என்று பார்ப்பார்கள். அதுபோல நான் கைதாகும் வரை இவர்களால் பொறுக்க முடியவில்லை!”

இம்மாதிரியான உவமைகள் பலவற்றை நான் அரும்பாடு பட்டுத் தொகுத்து வைத்திருந்தேன். என்றைக்காவது ‘ராஜாஜி உவமைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாகப் போட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

நானும் சின்ன அண்ணாமலையும் நெருங்கிய நண்பர்கள். புத்தகம் போடும் என் எண்ணத்தை அவரிடம் கூறி அதுவரை நான் தொகுத்து வைத்திருந்த எல்லா உவமைகளையும் அவரிடமே கொடுத்து வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/20&oldid=1145675" இலிருந்து மீள்விக்கப்பட்டது