உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடலூர் வேத பாட சாலையில்...

சின்ன வயசில், வீட்டில் சொல்லிக் கொள்ளாமல், அப்பா கொடுத்த சம்பளப் பணத்தைப் பள்ளிக்கூடத்தில் கட்டாமல் திருச்சி வரை போய் விட்டேன். அதுவரை பயணம் செய்த செலவு போக கொஞ்சம்தான் பணம் மிஞ்சி இருந்தது. திருச்சியில் ‘நகர தூதன்’ என்ற பத்திரிகை அலுவலகம் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்து வேலை கேட்டபோது இல்லை என்று சொல்லி விட்டார்கள். அங்கிருந்து திருப்பாதிரிப்புலியூர் சென்று அங்கே கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வேத பாடசாலைக்குப் போய், “சுப்பராயன் இருக்கிறானா?” என்று விசாரித்தேன்.

“அவன் லீவுக்கு ஊருக்குப் போயிருக்கிறான். திரும்பி வர ஒரு மாதம் ஆகும்” என்று சொல்லி விட்டார்கள்.

சுப்பராயன் என்னுடைய அத்தை மகன். அந்த வேத பாடசாலையில்தான் படித்துக் கொண்டிருந்தான். எப்படியும் சாப்பாடு போடுவான் என்ற நம்பிக்கையோடு அவனைத் தேடிச் சென்றேன். முதல் நாள் பிற்பகல் சாப்பிட்டதோடு சரி; அப்புறம் பசி வயிற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. கையில் ஒரே ஒரு தம்படிதான் மிச்சம். அதற்கு ஒரு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டேன். ஆமாம்; அந்தக் காலத்தில் தம்படியும் உண்டு. தம்படிக்கு ஒரு வாழைப்பழமும் உண்டு!

அப்புறம் என்ன செய்வதென்று புரியாமல் வேத பாட சாலை வாசலில் திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். தூக்கம் வர மறுத்தது. பசிக்கொடுமையும் சுப்பராயன் இல்லாத ஏமாற்றமும் சேர்ந்த சங்கடம் வயிற்றைப் பிசைந்து எடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/71&oldid=1146014" இலிருந்து மீள்விக்கப்பட்டது