பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறை எடுத்தவன்‌ உயிர்‌ விடுத்தது

91

வெட்டுவதற்காக ஓடி வந்தார்கள். அவர்கள் எங்கள் சமீபத்தில் வருவதற்குமுன், குண்டுகள் போட்டுக் கெட்டிக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை அவர்கள் மேலே பிரயோகித்தோம். குதிரையின் மேலிருந்த இருவர் தேகங்களிலும் குண்டுகள் பட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள். அவர்களைப் போய் வளைக்கும்படி என்னுடைய நேசருக்குச் சொல்லிய பின்பு வண்டியிலிருக்கிற ஸ்திரீகள் இன்னாரென்று அறியும் பொருட்டு, நான் குதிரையை விட்டுக் கீழே குதித்து வண்டிக்குப் பின்புறத்திலே போனேன். அந்த வண்டியிலிருந்த இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி என்னைக் கண்டவுடனே பெருஞ்சப்தமாய்க் கூவிக்கொண்டு வண்டியை விட்டுக் கீழே விழுந்தாள். அந்தச் சத்தம் ஞானாம்பாளுடைய குரலாயிருந்ததால் அவளை என் கையாலே தூக்கி நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தேன். அவள் தேகத்தில் ஒரு ஆபரணமுமில்லாமல் ஆண்டிச்சிகள் போலக் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு, முகத்திலே எதையோ பூசிக்கொண்டு, அழுக்குப் படிந்த தங்கப் பிரதிமை போல் உருமாறியிருந்தாள். அவளைப் பார்த்து “ஞானாம்பாள்! ஏனிப்படி யிருக்கிறாய்?” என்று கேட்டேன். அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டு “என்னைச் சீக்கிரத்தில் பனம்பள்ளிக் கிராமத்துக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள். சகல காரியங்களையும் பிற்பாடு தெரிவிக்கிறேன்” என்று நடு நடுங்கிக் கொண்டு சொன்னாள். அவளை உடனே தூக்கி வண்டியில் உட்காரவைத்து வண்டியைச் சீக்கிரமாக விடும்படி வண்டிக்காரனுக்கு உத்தரவு கொடுத்து, நான் குதிரையின் மேலேறிக் கொண்டு நானும் என்னுடைய சிநேகிதரும் வண்டிக்கு முன்னும் பின்னுமாகப் போனோம். குண்டு போட்டு மாண்டுபோனவர்களுடன் பாதசாரியாய் வந்த இருவர்களையும் பின்கட்டு முறையாகக் கட்டி அவர்களையும் கூடக் கொண்டுபோனோம். அன்று இராத்திரி எட்டு மணிக்குச் சம்-