பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

பிரதாப முதலியார் சரித்திரம்

பெற்றுக்கொண்டு இப்போது க்ஷேமமாய் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த ஸ்திரீயையும் புருஷனையும் அவர்களுடைய சந்ததிகளையும் இனி மேல் என்ன செய்கிறது? இரண்டாவது அந்தப் புரோகிதர் விதந்து கழுத்தில் தாலி கட்டினபடியால் அது பிரம சமாஜத்தார் பிரசங்கித்து வருகிற புநர் விவாகம் ஆகுமா? இந்தக் கேள்விகளுக்குத் தர்மசாஸ்திரப் பண்டிதர்கள் தக்க விடை கூறுவார்களென்று நம்புகிறேன்.

கனகசபையின் சுயம்வரம் முடிந்து சில நாள் சென்ற பின்பு என் தந்தையாரும் மாமனாரும் ஊருக்குப் போக உத்தரவு கேட்டார்கள். உடனே தேவராஜப் பிள்ளை அவர்களைப் பார்த்து “ஐயா! நீங்கள் இங்கே இருந்தது எங்களுக்குப் பெரிய அரணுங் கவசமும் போல் இருந்தது. உங்களுடைய பிரிவை நினைக்கும்போது எனக்கு மனசு பகீரென்கிறது. அந்த விசாரணைக் கர்த்தர்கள் அநியாயத் தீர்மானஞ் செய்த காலத்தில் நீங்களும் சுந்தரத்தண்ணியாரும் இவ்விடத்தில் இல்லாமலிருந்தால் எங்களுடைய கதி எப்படி முடிந்திருக்கும்? நீங்கள் போன பிற்பாடு நாங்கள் காவல் இல்லாத நகரம் போலவும் இறகில்லாத பக்ஷிகள் போலவும் மனம் வருந்துவோம்” என்றார். உடனே என் தகப்பனார் அவரை நோக்கி, “இனி மேல் கடவுள் உங்களுக்கு ஒரு ஆபத்தும் வர ஒட்டார். நாங்கள் எங்கள் ஊரை விட்டுவந்து வெகுநாள் ஆகிறபடியால் தாங்கள் கிருபை செய்து உத்தரவு கொடுக்க வேண்டும்” என்றார். உடனே கனகசபை எழுந்து என் தகப்பனார் பாதத்தில் விழுந்து “ஐயா! நீங்கள் இங்கே விஜயம் செய்த பிற்பாடு நான் இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டி போல எவ்வளவோ மனமகிழ்ச்சியா யிருந்தேன்? இப்போது நீங்கள் எல்லாரும் ஒருமிக்கப் போய் விட்டால் நான் எப்படிச் சகிப்பேன்? அண்ணனும் அண்ணியாவது இன்னுஞ் சில நாள் இவ்விடத்தில் இருக்கும்படி உத்தரவு செய்ய வேண்டும். ஒரு மாசத்துக்குள் நாங்கள் எல்லாருஞ் சத்தியபுரிக்கு வந்து,