பக்கம்:மயில்விழி மான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

39

களுக்குச் சௌகரியமாய்ப் போயிற்று. தை பிறந்ததும் முதல் காரியமாக முருகன் கோவிலில் எங்களுக்கு மணம் முடித்து வைப்பது என்றும் தீர்மானித்திருந்தார்கள்.

ஆனால் கடவுளின் விருப்பம் வேறு விதமாக இருந்தது. நான் அமுதத் தீவை அடைந்த சில மாதங்களுக்கெல்லாம் அத்தீவின் மேலாக அடிக்கடி ஆகாச விமானங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகத் தொடங்கின. ஏதோ பூகோள ஆராய்ச்சி செய்கிறவர்களைப் போல் தோன்றியது. சில நாளைக்கெல்லாம், அத்தீவுக்குச் சில மைல் தூரத்தில் ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கப்பல் வந்து நின்றது. இவற்றையெல்லாம் பார்த்ததும் எனக்கு ஊருக்குப் போகும் சுரம் வந்துவிட்டது. மயில்விழி மானின் மீது எனக்கு எவ்வளவு ஆசையிருந்தாலும், அவளை அழைத்துக் கொண்டு ஊருக்குப் போவதுதான் நல்லது. தமிழ்நாட்டுக்குப் போன பின்னர்ப் பொதுமக்களுக்கும் பொதுஜன சர்க்காருக்கும் அமுதத் தீவையும் அரக்கத் தீவையும் பற்றி எடுத்துச் சொல்லவேண்டும். பழைய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு இது மிகவும் உபயோகமாயிருக்கும். சர்க்காரும் யூனிவர்ஸிடி நிர்வாகிகளும் கட்டாயம் உதவி செய்வார்கள். நாலாயிரம் வருஷத்துக்கு முந்திய தமிழர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய நடை உடை பாவனைகள் எவ்வாறு இருந்தன என்பனவற்றை நேரிலேயே தெரிந்து கொள்ளலாம் அல்லவா?