பக்கம்:மயில்விழி மான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மயில்விழி மான்

தையெல்லாம் இளஞ்சென்னிக்கும் மயில்விழி மானுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் சம்மதிக்கும்படி செய்தேன்.

அதன் பிறகு கோட்டைச் சுவருக்கு வெளியில் உயரமான ஒரு பாறையில் போய் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கத் தொடங்கினேன். ஆகாசத்தில் விமானத்தைப் பார்த்த போதெல்லாம் கையில் இருந்த தடியில் ஒரு துணியை முடிந்துவிட்டு ஆட்டு ஆட்டு என்று ஆட்டினேன். கடைசியாக, ஓர் ஆகாச விமானத்தில் உள்ளவர்கள் என்னைக் கவனிப்பதாகத் தோன்றியது. அந்த விமானம் கொஞ்ச தூரம் போய்விட்டு திரும்பி வந்தது. வரும்போது அதன் அடியில் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கிட்ட வந்த பின் அது ஒரு வலை என்று தெரிந்தது. அந்த வலை என்னை அப்படியே பாறை மேலிருந்து தூக்கிக் கொண்டு போயிற்று. தூக்கிய அதிர்ச்சியிலேயே நான் நினைவு இழந்துவிட்டேன். பிறகு நினைவு வந்து பார்த்த போது, அமுதத் தீவிலிருந்து பார்த்த பிரம்மாண்டமான அமெரிக்கக் கப்பலில் இருந்தேன். எனக்குப் பிரமாதமான உபசாரங்கள் அக்கப்பலில் செய்யப்பட்டன. நான் அங்கு வந்து சேர்ந்ததுபற்றியும் நான் பார்த்தவற்றைப் பற்றியும் கேட்டார்கள். எல்லாம் சொன்னேன்.

ஆனால் கப்பல் நிர்வாகிகள் விமானத்திலிருந்து நான் விழுந்ததை மட்டும் ஒப்புக் கொண்டார்களே தவிர, மற்றது ஒன்றையும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் பார்த்ததெல்லாம் என் சித்த பிரமை என்றார்கள்.