பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 142 எண்ணியே - நம்பியே - ஊமைத்துரை தமக்கு இடர்வந்த நேரத்து மருதரசரை நாடினாராம். ஊமைத்துரையின் துயரக்கண்ணிர் மருது பாண்டியர் மனத்தை - சிறப்பாகச் சின்ன மருதுவின் உள்ளத்தை - உருக்கியது. இன்பமாய் இருந்த காலத்தினும் துன்பம் உள்ள வேளையில் ஒன்றிய உள்ளத்தினர் ஆதல் அன்றே தலையாய நண்பர்களின் தனிப்பண்பு? அப்பண்பு வழி இயங்கியது தமிழ் நாட்டுச் சுதந்தர வீரர்களின் வாழ்க்கை. பாஞ்சைப்பதியை விட்டு வெளியேறிய ஊமைத்துரை சிவகங்கைச் சீமையின் அடைக்கலம் புகுந்துவிட்டான் என்ற செய்தி வெள்ளைத் தளபதிகள் காதில் ஆயிரந்தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டியது போலப் போய்ச் சேர்ந்தது. 'மருது பாண்டியரை வெல்வது எப்படி!' என்று அவர்கள் மனம் கலங்கினார்கள். ஆனாலும், பீரங்கியின் பலம் இருக்கிறது. தமிழகத்தில் தமிழனையே காட்டிக் கொடுக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள், நச்சுக் குண்டுகளால் - முடியாவிட்டால் - நயவஞ்சகத்தால் வெல்வோம்' என்று திட்டமிட்டார்கள் பரதேசித் தளபதிகள். தென்னாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் லூவிங்டன் மருதுவை அழைத்துச் சிவகங்கைச் சீமையின் முதல் தலைவராகிய சசிவர்ணர் வழிவந்தவரே மருது பாண்டியர் என்பதற்கும் அவர்கள் சீமையை ஆளும் உரிமையைப் பெற்றதற்கும் உரிய ஆதாரங்களைக் காட்டும்படி வற்புறுத்தினான். தாம் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு வெள்ளையன் சதி செய்ய விரும்புகிறான் என்பதை அறிந்து கொண்டார் வெள்ளை மருது. நாடோடியாக வந்தவன் நாடாளும் உரிமை படைத்த என்னை அதிகாரம் பெற்ற ஆதாரம் காட்டக் கட்டளையிடுவதா!' என்று ஆத்திரங்கொண்டார். எனவே, அறிஞர் கால்டுவெல் கூறுவது போல, இனி வெள்ளையர்க்கு வளைந்து கொடுப்பதினும் வாளேந்திப் போர் புரிவதே தவிர்க்க முடியாத ஆபத்தினின்றும் தப்புவதற்கான நல்ல வழி, என்று முடிவு செய்தனர் மருது பாண்டியர். அதோடு சென்னை அரசாங்கத்திற்கு ஒரு கடிதமும் எழுதினராம் மருதரசர். அதில் தென்பாண்டி நாட்டில் மூளும் கலகங்கட்கெல்லாம் லூவிங்டனின் குறும்புகளே காரணம் என்றும், எனவே, அவனை மாற்றிவிட்டு வேறு கலெக்டரை நியமிக்க வேண்டும் என்றும் அதில் வரைந்திருந்தனராம்." ஊமைத்துரை அடைக்கலமாகப் புகுந்த சிவகங்கைச் சீமையின் நிலையை நேரில் கண்டறிந்த கர்னல் புல்லர்ட்டன் தன் அறிக்கை ஒன்றில் சித்திரித்துக் காட்டியுள்ளான். அது வருமாறு: