பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பேராசிரியர் ந.சஞ்சீவி 'சிவகங்கை அல்லது சிறிய மறவர் நாடு கிழக்கே கடற்கரையிலிருந்து மேற்கே மேலுர் மதுரை ஜில்லாக்கள் வரையும், வடக்கே தொண்டைமான் நாடு வரையும், தெற்கே பெரிய மறவர் நாடு (அல்லது இராமநாதபுரம்) வரையும் சுமார் ஐம்பது மைல் நீளமும் நாற்பது மைல் அகலமுள்ள நிலபரப்பாய் அமைந்திருந்தது. ஆறுகளும் செயற்கை நீர்த்தேக்கங்களும் சிறிய அளவிலிருந்த போதிலும், அதிகமான முட்களும் புதர்களும் நாடு முழுவதும் வளர்ந்திருந்தமையால், தானியங்களைப் பயிரிடத் தகுதியற்ற நிலையாயிருந்தது. சுமார் நாற்பது மைல் சுற்றளவுள்ள காளையார் கோவில், காட்டின் நடுவில் அமைந்துள்ள காளையார் கோவில், படையெடுப்புகளுக்குத் தக்க பாதுகாவலான இடம். அது அரண்களாலும் தற்காப்பு வசதிகளாலும் பலப் படுத்தப்பட்டிருந்தது. காடுகளிலும் அதைச் சுற்றிலுமுள்ள நாட்டிலும் கால் நடைகள் அதிகமாயிருந்தன. கத்தி, வாள், ஈட்டி, வேல், துப்பாக்கி முதலியவைகள் தாங்கிய பன்னிரண்டாயிரம் வீரர்களைத் தேர்ந்தெடுக்கத்தக்க அவ்வளவு அதிக மக்கள் தொகையிருந்தது. அம்மக்கள், அருகே வாழ்ந்த கள்ளர்களைவிடச் சிறிது நாகரிகமுடையவர்களாயிருந்தபோதிலும், கலை தொழில் முதலியவை சிவகங்கை நாட்டில் சிறிய அளவிலேயே விருத்தியடைந்திருந்தன. பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்ட ஐந்து நாள்களுக்குப் பின் 1801 ஆம் ஆண்டு, மே மாதம் 28 ஆம் தேதி வெள்ளைப் பட்டாளம் முழுவதும் நாகலாபுரத்தில் மேஜர் ஷெப்பர்டு தலைமையில் குழுமியது. இப்பட்டாளத்தோடு மேஜர் கிரே தலைமையில் வந்த இன்னொரு பட்டாளமும் சேர்ந்து கொண்டது. மே மாதம் 29 ஆம் தேதி இராமநாதபுரத்திற்குரிய பலம் வாய்ந்த கமுதிக் கோட்டையை மருதுவின் படை பிடித்துக் கொண்டது. இதை அறிந்ததும் வெள்ளைப் படைகள் அக்கோட்டையை விடுவிக்க விரைந்தன. பலத்த போருக்குப்பின் கமுதிக் கோட்டை வெள்ளையர் உடைமையாயிற்று. கோட்டையின் பாதுகாப்பிற்காகச் சிறு படையை இங்கே விட்டு விட்டு, வெள்ளைப்பட்டாளம் நாகலாபுரச்சேரியிலிருந்து நாற்பத்தாறு மைல் துரத்தில் உள்ள திருப்பூவனத்தை அடைந்தது. சிவகங்கைச்சீமையில் முதல் முதலாக வெள்ளைப்படைக்கும் மருதுவின் வீரர்கட்கும் மோதல் ஏற்பட்ட இடம் இதுவே. அல்லும் பகலும் மருதுவின் படை ஆங்கிலேயச் சேனைக்கு வெற்றிலை தோட்டத்திலிருந்தும் வேறு இடங்களிலிருந்தும் ஆறாத் துயர் விளைத்தது." ஜூன் மாதம் 4 ஆம் தேதி மேஜர் கிரகாம் என்பவன் படைப்பிரிவையும் அதற்குத் துணை போன மேஜர் ஷெப்பர்டின் படைப்பிரிவையும் மருது பாண்டியர் சேனை கடுமையாகத் தாக்கியது. ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெள்ளைப் படை மெள்ளத் திருப்பூவனத்தை விட்டுத் திருப்பாச்சேத்திக்கு நகர்ந்தது.