பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 146 நத்தத்திலிருந்து புறப்பட்ட கர்னல் இன்ஸின்படை புரட்சி வீரர்களால் பட்ட அல்லல் சொல்லி முடியாது. சிங்கப்பிடாரியிலும் மண்ணப்பச்சேரியிலும் இன்ஸின் படையை நையப் புடைத்தார்கள் மருதுவின் வீரர்கள். இப்போரில் காப்டன் ஹிட்லண்டு என்பவனும் லெப்டினன்ட் பிர்த்து என்பவனும் படுகாயமுற்றனர். ஐந்து ஐரோப்பியரும் கொல்லப்பட்டனர். இருபத்து நான்கு படை வீரர் படுகாயமுற்றனர் . வெள்ளையர் கணக்குப்படி இந்நிலையில் கர்னல் இன்ஸ், புதுக்கோட்டைத் தொண்டைமான் தன் துரோக சிந்தைக்கு அறிகுறியாக அனுப்பி வைத்த கூலிப்படைகளுடன் வந்து சேர்ந்தான். தங்கட்கு எதிராகத் தொண்டைமானின் கூலிப்படைகள் சிவகங்கைச் சீமையில் கால் வைத்த இந்நாளிலேதான் மருதுபாண்டியர்கள் தீப்பந்தங்களை எறியும் முறையைக் கடுமையாக மேற்கொண்டார்கள். ஒருவாறு கர்னல் இன்ஸின் படையும் அக்கினியூவின் படையும் சேர்ந்து ஏழாயிரம் வீரர்கள் கொண்ட பெரும்படையாயிற்று. இப்படை ஒக்கூரை நோக்கிப் புறப்பட்டது. ஜூன் மாதம் 28 ஆம் தேதி ஒக்கூரைப் பிடிக்க வெள்ளைப் படைகள் போரிட்டன. அவற்றை எதிர்த்து மருதிருவர் நடத்திய போராட்டத்தில் நாலாயிரம் சுதந்தர வீரர் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். பகலெல்லாம் ஒக்கூரைப் பிடிக்கப் பெரும்போர் புரிந்த பறங்கிப்படை, பொழுது சாய்ந்ததும் அந்த அழகிய ஊரைத் தீவைத்துச் சாம்பலாக்கியது. ஜூலை மாதம் 29 ஆம் தேதியிலிருந்து ஆங்கிலப் படை ஒவ்வோர் அங்குலத்தையும் கடக்க எண்ணற்ற உயிர்களைப் பலி கொடுக்க நேர்ந்தது. கரடு முரடான பாதைகளிலும் காடடர்ந்த பகுதிகளிலும் வெள்ளைப் பட்டாளம் சிக்கித் தவித்தது. சிறுவயலை - சின்ன மருதுவின் தலை நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வெள்ளைப் படையை எதிர்த்துக் கடும் போர் உடற்றினர் உரிமைக்காகப் போராடிய உத்தமர். ஜூலை மாதம் 30 ஆம் தேதி அழகிய சிறுவயல் நகரம் கோரமாய்த் தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் 540 வெள்ளையரும், மலாய் நாட்டுத் துப்பாக்கிக்காரர்களும், மூன்று கூலிப்பட்டாளமும் கலந்து கொண்டார்கள். கர்னல் அக்கினியூவின் தலைமையில் நடந்த இக்கடுந்தாக்குதல் முடியும் வரை மருதுவின் படை வீரர்கள் தங்கள் ஆற்றலை எல்லாம் பயன்படுத்தித் தடுத்தார்கள்; எதிர்த்தார்கள். ஆனால், பீரங்கிகளின் கனல் மழைக்கு ஆற்றாது மருதுவின் படை தளர நேர்ந்தது. தாங்கள் தளரினும் தங்கள் அருமைத் திருநகராகிய சிறுவயல் பகைவர் கைக்குள் அகப்படக் கூடாது என்று எண்ணிய சுதந்தர வீரர்கள் தங்கள் கையாலேயே தங்கள் நகர்க்குத் தீ வைத்தார்கள்.