பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 150 ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி ஆங்கிலப்படைகளால் 335 கெஜங்களுக்கு மேல் முன்னேற முடியவில்லை. ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி அடிமேல் அடியிட்டு முன்னேறி வந்த ஆங்கிலப் படைக்குக் காளையார் கோவில் கோபுரம் புலப்பட்டது. 500 கெஜத் துரத்திற்குமேல் இன்றைய தினத்தில் இங்கிலீஷ் துரைகளால் முன்னேற முடியவில்லை. ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி நடைபெற்ற போரில் ஆங்கிலப் படையின் கையே வலுத்திருந்தது. அதன் விளைவாக 30 சதுர கெஜம் அளவு கொண்ட காவல் கொத்தளம் ஒன்று கட்டப்பட்டது. வெட்டுதற்கரிய மிகப்பெரிய புளியமரம் ஒன்றை அடுத்திருந்த இடத்திலிருந்து பார்த்தால் காளையார் கோவிலும் சிறுவயலும் கண்ணுக்குத் தெளிவாய்த் தெரிந்தன. ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி கர்னல் இன்ஸ் தலைமையில் ஆங்கிலப் படை 500 கெஜத்துரம் வழி கண்டது. இன்றைய தினத்தில் காப்டன் பிளாக்பர்ன் தலைமையில் படையும் உணவுப் பொருள்களும் அறந்தாங்கி வழியே வந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தி ஆங்கிலப் படைக்குத் தெரிந்தது. ஆகஸ்டு மாதம் 11 ஆம் தேதி கர்னல் பார்லிம்பர் தலைமையில் ஆங்கிலப் படைக்கு உதவியாக மிகுதியான பொருள்கள் வந்து சேர்ந்தன. காளையார் கோவில் ஆங்கிலப் படைகள் இருக்கும் இடத்திலிருந்து ஒன்றரை மைல் துரத்திலேயே இருக்கும் என்பது ஊகிக்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி ஆங்கிலப் படை மருது பாண்டியரின் கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இரையாயிற்று. ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி மேஜர் ஷெப்பர்டு தலைமையில் கிளம்பிய வெள்ளைப்படையும் எட்டயபுரக் கூலிப்படையும் நையப்புடைக்கப்பட்டன. எட்டயபுரக் கூலிப்படையைக் களத்தில் கண்டதும் அவமானமும் ஆத்திரமும் பொறுக்கமாட்டாத மருதுபாண்டியரின் வீரர்கள் உயிரைத் துரும்பாகக் கருதி உறுத்தெழுந்து பெரும்போர் புரிந்தார்கள். இன்றைய போரில் மட்டும் இருநூறு விடுதலை வீரர் பலியாயினர். 'காளையார் கோவிலை நெருங்கிவிட்டோம்!' என்று களிவெறி கொண்டிருந்த ஆங்கிலப்படை முன்னினும் காட்டின் அடர்த்தி நுழைய முடியாத பெருநெருக்கமாய் இருந்தது கண்டு திகைக்கலாயிற்று. ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி ஆங்கிலப் படைகள் 355 கெஜம் முன்னேறின. காளையார் கோவில் மிகத் தெளிவாகப் பரதேசிப்படையின் கண்கட்குப் புலனாகியது. இரவெல்லாம் ஆங்கிலப் படையை மருதிருவர் படை வீரர்கள் சுட்டவண்ணம் இருந்தார்கள்.