பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 பேராசிரியர் ந.சஞ்சீவி சகோதரர்கள் காலமான பின்பு அவர்கள் விருப்பத்திற்கு மாறாகச் சீமை வேற்றார் கைக்குச் சென்றது என்பது மறக்க முடியாத உண்மை. இந்நிகழ்ச்சிகள் நடந்து நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இனியேனும் வேற்றார் கையில் சிக்கிய சொத்துக்களை நாட்டின் பொதுவுடைமையாக்கி மருது பாண்டியரின் புகழை நிலை நாட்டும் பயனுடைய நிலையங்களாக அவற்றை உருவாக்க வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த தியாகிகளின் பரம்பரையைத் தொடங்கிவைத்தவர்கள் மருது சகோதரர்கள். அவர்கள் கால்வழியில் தோன்றியவர்களுள் தக்கோர்க்கு வேண்டும் ஆதரவுகளை அரசாங்கம் விருப்புடன் செய்வதும் போற்றற் குரியதாகும். பாஞ்சாலங்குறிச்சி வீர சகோதரர்களின் திருவுருவத்தை இன்று நாம் கற்பனை ஓவியங்களிலேதான் காண முடிகிறது. ஆனால், மருது சகோதரர்களின் திருவுருவங்கள் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அழகு மிக்க சிலைகள் ஆக்கப்பட்டு இன்றும் காளையார் கோவிலும், குன்றக்குடியிலும், திருமோகூரிலும், நரிக்குடியிலும் காட்சி அளிக்கின்றன. இச்சிலைகளை மாதிரியாகக் கொண்டு அவ்வீர சகோதரர்களின் நினைவை நாடெங்கும் பரப்ப விடுதலை பெற்ற இந்தியா புதிய சிலைகளைச் செய்து முக்கியத் தலைநகரங்களில் - பல்லோரும் கண்டு போற்றிப் பயனடையுமாறு தக்க இடங்களில் - அமைக்க வேண்டும். சிறப்பாகத் தமிழ் நாட்டின் தலைநகரில், சென்னை அரசாங்கக் கோட்டை வாயிலில், பாஞ்சாலங்குறிச்சிச் சகோதரர்களின் உருவங்களையும் மருது சகோதரர்களின் திருவுருவங்களையும் மிகப் பெரிய சிலைகளாக வடித்தெடுத்து அழகுற அமைக்க வேண்டும். ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்களில் மருது பாண்டியரின் புகழை நினைவு கூறும் திருவிழாக்கள் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பால் தமிழர் வாழும் பகுதிகளிலும் நடைபெற வேண்டும். சிறப்பாகச் சிவகங்கையிலும், மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரிலும், அவர்களுடைய சமாதிகளுள்ள காளையார் கோவிலிலும் அரசாங்க ஆதரவிலேயே ஆண்டுதோறும் நினைவு விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும். மருது பாண்டியரோடு தொடர்புடைய இடங்களாகப் போற்றப்படும் சிவகங்கை அரண்மனை, அவ்வூரை அடுத்துள்ள பொன்னாள் குளம், நரிக்குடிச்சத்திரம், சத்திரத்திற்குப் பின்னுள்ள மருது பாண்டியர் கோவில்கள், திருப்பத்துரிலும் காளையார் கோவிலிலும் அமைந்துள்ள வீர சகோதரர்களின் சமாதிகள், காளையார் கோவிற் காட்டிலுள்ள குண்டடிபட்ட புளி - இன்னோரன்ன பிறவும் சரித்திரச் சிறப்புடைய சின்னங்களென இந்திய அரசாங்கம் கருதிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். வாய்ப்புக்