பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 178 கிடைக்கும்போதெல்லாம் மக்களும் தலைவர்களும் சுதந்தர வீரர்களின் நினைவை அழியாது காத்து வரும் இந்நினைவுச் சின்னங்களை நாடிச் சென்று கண்டு மகிழ்ந்து போற்றிப் பணிய வேண்டும். மறைந்த சுதந்தர வீரர்கட்கு நன்றி செலுத்தி வீர வழிபாடு ஆற்றப் பாஞ்சாலங்குறிச்சிக்கும் சிவகங்கைச் சீமைக்கும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பாரத மக்கள் புனித யாத்திரை செய்து பயனடைய வேண்டும். ஏகாதிபத்தியத்தை - அடிமை வாழ்வை - ஆவேசம் கொண்டு எதிர்த்தவர்கள் என்ற முறையில் மருது சகோதரர்கள் - உலகமெல்லாம் போற்றத் தக்க மனித குலத்திற்கே பொதுவான சுதந்தர வீரர்கள்; இந்திய விடுதலைப்போரைத் தொடங்கி வைத்தவர்கள் என்ற முறையில் பாரதநாடு முழுவதும் சிரந்தாழ்த்திப் போற்றத்தக்க சிறப்பு வாய்ந்தவர்கள்; தமிழ்க் குடியில் பிறந்து தமிழகத்தை ஆண்ட தன்மான வீரர்கள் என்ற முறையில் தமிழ் மக்களின் நெஞ்சிலே கோவில் கொள்ளுதற்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த பெருமக்கள். எனவே, உலகவர் என்ற முறையிலும், இந்தியர் என்ற வகையிலும், தமிழர் என்ற உரிமையிலும், மருதிருவருக்கு - பதினெட்டாம் நூற்றாண்டு கண்ட பழுதில்லா மாணிக்கங்கட்கு - மேற்கூறியவாறெல்லாம் உள்ளம் உருகி வழிபாடாற்றல் நம் கடமை.