பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... சோம்பல் பல வகைத் தீமைகளைப் பயந்துவிடும். வாழ்வில் அனைத்து நலங்களையும் கெடுத்துவிடும். சோம்பலாக இருப்பவனுடைய மனம், தீயனவற்றையே எண்ணியெண்ணி வட்டமிடும்; தீச் செயல்களைச் செய்யவே அது நாடும்; நல்லனவற்றை எண்ணவோ செய்யவோ விடாது; பிறர்க்குத் துணை செய்து வாழவும் இடந்தராது. “வேலையின்றிச் சோம்பிக் கிடக்குங் கைகளுக்கு ஏதாவது குறும்பு கிடைத்துக் கொண்டேயிருக்கும்” - என்றொரு பழமொழியுண்டு. சோம்பலை விடுத்து, ஏதேனும் முயற்சியில் ஈடுபட்டால், மனம் அம்முயற்சியிலேயே சென்று கொண்டிருக்கும்; வேறு தீய எண்ணங்களிற் செல்லாது. அதனால் எப்பொழுதும் ஏதேனும் செய்து கொண்டே யிருக்க வேண்டும்; முயன்று கொண்டே யிருக்கவேண்டும்; மனத்தில் எழுச்சி ஒளிவிட்டுக் கொண்டே யிருக்கவேண்டும். ஒருவனுடைய உயர்வு, அவனுடைய முயற்சியை - ஊக்கத்தைப் பொறுத்தே அமையும். நமது ஊரிலே உள்ள தாமரைக் குளத்தில் நீர் எந்த அளவில் இருக்கிறதோ அந்த அளவில் தாமரையுங் காணப்படுகிறது. நீர் மிகுந்திருந்தால் உயர்ந்து காணப்படுகிறது; குறைந்திருந்தால் தாழ்ந்து காணப்படுகிறது. அதுபோலவே முயற்சி மிக்கிருந்தால் வாழ்வு உயர்ந்து தோன்றும்; குறைந்திருந்தால் தாழ்ந்து தோன்றும். முயற்சியுடையார் என்றுமே இகழ்ச்சியடையார். 'முயற்சி திருவினையாக்கும் என்பது முதுமொழி. சிலர் விதி விதி யென்று கூறிக்கொண்டு, எவ்வகை முயற்சியும்