தந்தையும் மகளும்/127

விக்கிமூலம் இலிருந்து


127அப்பா! துணியைத் தீப்பிடிக்காமல் இருக்கும்படி செய்யலாம் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! துணியானது பட்டு, பஞ்சு, ரோமம் முதலிய பொருள்களைக் கொண்டு செய்யப்படுவதால் தீப்பிடிக்கக் கூடியதேயாகும். ஆயினும் தார் எண்ணெய்யிலிருந்து சாயங்கள் செய்வதற்கான முறையைக் கண்டுபிடித்த ஸர். பெர்க்கின் வில்லியம் என்னும் ஆங்கில விஞ்ஞானி ரோமத்தால் செய்த பிளானல் துணியைத் தீப்பிடிக்காமல் செய்வதற்காகப் பலவாறு முயன்று இறுதியில் வெற்றி பெற்றார்.

துணியைப் பல்வேறு ரஸாயனப் பொருள்களில் தோயத்துத் துணியின் நூலில் தகர உப்பு ஒன்று உண்டாகுமாறு செய்து அதைத் தீப்பிடிக்காதவாறு செய்தார். இப்பொழுது தகர உப்புக்குப் பதிலாக சோடியம் டங்ஸ்டைட் என்னும் உப்பையும் உபயோகிப்பது உண்டு

மேனாடுகளில் நாடகக் கொட்டகையில் அடிக்கடி தீப்பிடிப்பது வழக்கமாயிருப்பதால் நாடகக் கொட்டகையில் உபயோகிக்கும் படத்திரைகள் போன்ற துணிகளை எல்லாம் இவ்விதம் செய்தே உபயோகித்து வருகிறார்கள். இதுபோலவே ஆஸ்பெஸ்டாஸ் என்னும் கல்நாரால் செய்த துணிகளையும் உபயோகிப்பார்கள். ஆஸ்பெஸ்டாஸிடமும் தீ அணுகமாட்டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/127&oldid=1538330" இலிருந்து மீள்விக்கப்பட்டது