தந்தையும் மகளும்/91

விக்கிமூலம் இலிருந்து


91அப்பா! செங்கல்வண்டி குடை சாய்வதில்லை, வைக்கோல் வண்டி குடை சாய்கிறது, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! வித்தை செய்கிறவர்கள் தாம்பாளத்தை எடுத்து அதை ஒரு விரல் நுனியில் நிறுத்துவதைப் பார்த்திருப்பாய். அது அப்படியே நிற்கும். அதைச் சுற்றிக்கூட விடுவார்கள். அப்பொழுது அது விரல் நுனியில் விரைவாகச் சுற்றவும் செய்யும். அப்படி அது கீழே விழுந்து விடாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

அம்மா! பூமிக்கு ஆகர்ஷண சக்தி உண்டென்றும் அதைக் கொண்டு பூமி சகல பொருள்களையும் தன்னிடத்தே இழுத்துக் கொள்கிறது என்றும் நீ அறிவாய். அதுபோல் பூமி தாம்பாளத்தையும் இழுக்கிறது. தாம்பாளத்தில் எந்தப் பாகத்தை இழுக்கிறது? சகல பாகங்களையும்தான். ஆயினும் தாம்பாளத்தின் கனம் முழுவதும் விரல் நுனியுள்ள இடத்திலேயே குவிந்து இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால்தான் தாம்பாளத்தை அந்த இடத்தில் நிறுத்த முடிகிறது. அப்படி ஒரு வஸ்துவின் கனம் முழுவதும் எந்த இடத்தில் குவிந்திருப்பது போலத் தெரிகிறதோ அந்த இடத்தை ஆகர்ஷண கேந்திரம் என்று கூறுவார்கள்.

அந்தக் கேந்திரத்திலிருந்து கீழ் நோக்கிச் செங்குத்தாகக் கோடு இழுத்தால், அது வஸ்துவின் பாதத்திற்குள் விழுமானால்தான், வஸ்து சாயாமல் இருக்கும். அப்படிச் செங்குத்துக் கோடு பாதத்திற்குள் விழவேண்டுமானால் ஆகர்ஷண கேந்திரம் பாதத்துக்கு அருகிலேயே இருக்க வேண்டும்.

வண்டியின் பாதம் என்பது சக்கரங்களுக்கு இடையேயுள்ள பாகமேயாகும். அதனால் வண்டி குடை சாயாமல் இருக்க வேண்டுமானால் அதன் ஆகர்ஷண கேந்திரம் அந்தப் பாதத்துக்கு அருகில் இருக்க வேண்டும். செங்கல் கனமான பொருளாதலால் செங்கல் வண்டியின் ஆகர்ஷண கேந்திரம் பாதத்துக்கு அருகிலேயே இருக்கும். அதனால் தான் அது குடை சாய்வதில்லே. ஆனால் வைக்கோல் வண்டியில் வைக்கோலை அதிக உயரமாக அடுக்குவதால் அதன் ஆகர்ஷண கேந்திரம் உயர்ந்து விடுகிறது. அதனால் அது சொற்பமாகச் சாய நேரிட்டாலும் அது குடை கவிழ்ந்து போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/91&oldid=1538253" இலிருந்து மீள்விக்கப்பட்டது