பக்கம்:உலகு உய்ய.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

'உலகு உய்ய” என்ற இந்த நூலில் எங்கேனும் நான்கு பக்கங்கள் புரட்டிவிட்டு டாக்டர் சுந்தர சண்முக னாரைக் குறை சொல்லக்கூடாது. எல்லாப் பக்கங்களையும் ஆர அமரப் படித்துவிட்டால் குறை சொல்ல மனம் வராது; 'நோய்ப் பகைவனிடம் நாள்தோறும் போராடி இத்துணைச் சிறப்பான நூலைச் சுந்தர சண்முகனார் எழுதியிருக்கிறாரே!” என்று ஆச்சரியப்படத் தோன்றும். செய்வன திருந்தச்செய்யும் இயல்பினர் சுந்தர சண்முகனார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த ”திருக்குறள் தெளிவுரை”யிலிருந்து, அவரிடம் செய்வன திருந்தச் செய்யும் உயர்ந்த பண்பைப் பார்த்து வருகிறேன். ஆயிரம் ஆண்டுகளானாலும் அழிக்க முடியாத கருத்துக் கருவூலங்களைத் தேடிக்கொடுத்தவர் அவர். உடனிருந்தே இடையூறு செய்துகொண்டிருக்கும் நோயைப் (மூளைக் கட்டி) புறங்கண்டு, உலகில் ஒருமை உணர்வு தோன்றவேண்டும் என்ற உணர்வு கொண்டு 'உலகு உய்ய” என்ற இந்த நூலைப் படைத்திருக்கிறார் சுந்தர சண்முகனார். “கீதாஞ்சலி' என்னும் நூலை முதலில், வங்காள மொழியில் எழுதிப் பின்னர் அதனையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நோபல் பரிசைப் பெற்ற டாகூரைப் போல், உலகு உய்ய என்ற இந்த நூலை டாக்டர் சுந்தர சண்முகனாரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (சமா தானத்திற்கு உரிய) நோபல் பரிசு பெற வேண்டும் என்று நான் இறைவனை இறைஞ்சுகிறேன். அந்தத் தகுதி இந்த நூலுக்கு உண்டு.

இவண் சிவ. கண்ணப்பா 2–3–1987

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/5&oldid=508270" இலிருந்து மீள்விக்கப்பட்டது