உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கள்வர் தலைவன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

[அங்கம்-1

கள்வர் தலைவன்

நான் இக்கதிக்கு வந்தேனே ! சீ ! நான் மற்றவர்களைப் போல் கள்ளம் கபடமுடையவனாயிருந்திருப்பேனாயின் இக்கதிக்கு வந்திருக்கமாட்டேனென்பது திண்ணம்! - இதெல்லாம் முன் வினைப்பயனே! - ஏன் இன்னும் இந்த யமகிங்கிரர்கள் திரும்பி வரவில்லை? ஐயோ! என் மனதை நான் எவ்வளவு திருப்பியும் ஒரு வழியில் நில்லேனென்கிறதே! அப்பா ! பாலசூரியா! உன்னையும் உனதன்னையையும் கடைசி முறைப் பாராது நான் இறக்கவேண்டியதாயிருக்கின்றதடா! என் கண்மணியே! என்னை மேம்படுத்த வந்த என்னருஞ் செல்வமே! நான் இறந்த பின் யாரையடா அப்பா என்றழைக்கப் போகின்றாய் ! நான் இறந்ததை யறிந்தால் நீயும் இறப்பாயென்பது நிச்சயம். பிறகு பேதையாகிய உன் அன்னைக்குத் தேறுதல் சொல்வார் யார் ? ஐயோ! செளமாலினி எட்டு மாதத்துப் பூரண கர்ப்பிணியா யிருக்கின்றாளன்றோ! அந்தோ! அந்தோ! என் மனம் சுழல்கின்றது ! ஒன்றும் தோற்றவில்லையே! என் கண் பஞ்சடைகின்றதே! பால சூரியா செளமாலினி--

ஜெயபாலன் தாரத்தில் வருகிறான்.

ஜெ.ஈதாகும் மனிதனுடைய வாழ்க்கை ஒவ்வொரு மனிதனும் என்ன என்ன எண்ணங்களெல்லாம் எண்ணி என்ன என்ன தீர்மானிக்கிறான்! அவைகள் எவ்வெவ் விதம் முடிகின்றன! பேதை மனிதனால் என்ன முடியும்? இவ்வுண்மையை அறியாது மனிதன் எவ்வளவு தான் என்கிற அகங்காரத்தையும் கர்வத்தையும் கொள்ளுகின்றான்! இதற்குப் பிரத்தியட்சமான உதாரணம் என் கண் முன்பாக இதோ தோற்றுகின்றதே! இப்பேதை மனிதன் சற்று முன்பாக நமது கள்வர் கையிற்படுமுன் என்ன என்ன எண்ணியிருந்தானோ ? அவ்வெண்ணங்களெல்லாம் சிறிது பொழுதுக்குள் என்னவாகப் போகின்றன! ஐயோ பாவம், பேதை மனிதன்! சீ! அதிருக்கட்டும் இப்பொழுது அவனைப் பார்த்து பரிதாபப்படுகின்ற நான் அவனைவிட என்ன உயர்ந்த ஸ்திதியிலிருக்கிறேன்? அவன் இன்னும் கால் நாழிகையிலிறக்கப் போகின்றான் நான் இன்னும் ஒரு மாதத்திலிறக்கப் போகின்றேன். ஒரு மாதமா? ஆம், சரியாக ஒரு மாதம் இன்னும் கெடு வைத்திருக்கிறான் செளரிய குமாரன் நமக்கு. ஆ. செளரிய குமாரா ! -ஆயினும் இப்பேதை மனிதனுடைய மனநிலைமை எப்படியிருக்கிறதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/6&oldid=1555685" இலிருந்து மீள்விக்கப்பட்டது