பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492

திருக்குறள்



1209. விளியுமென்பர் னின்னுயிர் வேறல்ல

ரளியின்மை யாற்ற நினைந்து

என்பது*

முன்பெல்லாம் நாமிருவரும் வேறல்லே மென்று சொல்லுவாரது அளியின்மையை நினைந்து, என்னுயிர் கழியா நின்றது என்றவாறு.

அவர் வேறல்லேம் என்ற உறுதி பற்றி யிருந்த தென்னுயிர் என்பதாம்.

1210. விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்

படாஅதி வாழி மதி

என்பது

மதியே! என் நெஞ்சில் இடைவிடாது இருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணள வாயினும் எதிர்ப்படும் வகை நீ படா தொழிவாயாக என்றவாறு.

மதியே! உறுதி சொன்ன நாயகனைக் கண்களாற் காணுமளவும் மறையாதிருக்க வென்று நினைந்ததாம்.

ஆக அதிகாரம் ளஉக க்குக் குறள் நஉள௰

இப்பால் 122. கனவு நிலையுரைத்தல்

என்பது, தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுகிறது. அந்தக் கனவும் நினைவு மிகுதியினாலே காணப்பட்டதாம்.

1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்

கியாதுசெய் வேன்கொல் விருந்து

என்பது, தலைமகன் தூதுவரக் கண்டவள் சொல்லியது:

யான் வருத்தப் படுகிறது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என்னிடத்திலே வந்த கனவுக்கு


*இங்கும் அடுத்த குறட்கும் பரிமேலழகர் தந்த துறைக் குறிப்பில்லை