உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


இதுவரை தோன்றிய தமிழ்க் கவிஞர்களுள் எண்ணற்ற சிறப்பைப் பெற்றவர் உவமைப் பாவலர் சுரதா அவர்கள். உலகக் கவிஞர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க ஒப்பற்ற பாவலர். இன்றைய எழுச்சிக் கவிஞர்கள் பலரும் சுரதா என்னும் சூரியனிலிருந்து ஒளிபெற்ற நிலவுகள்தாம் என்றால் மிகையில்லை.

புதுக்கவிதைச் செறிவுகளை மரபுப்பாடல்களிலே தந்த மாபெரும் புலவர். காட்சிக்கு எளியரெனினும் அவரது கவிதைச் சிகரத்தை யாரும் எட்டிப் பிடித்துவிட முடியாது.

பாவேந்தருடைய தலைமாணாக்கராய்த் திகழும் கவிஞர் பெருமான் முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் தமிழ்க் கவிதைப் பாலம் அமைத்த கவிதைப் பொறியாளர்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இராசராசன் விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது (தேன்மழை) போன்ற பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டதாலே சிறப்புப் பெற்றன.

தமிழ்ச் சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மாரியை (தேன்மழையை) எமது அருள்-சுடர் பதிப்பகம் ஆறாவது பதிப்பாக வெளியிடுவதிலே மிகவும் இன்பம் கொள்கிறது.

பல தமிழ்க் கவிஞர்கள் சொற்சுவைக்கவிஞர் சுரதா அவர்களின் பாட்டுத் துறைமுகத்திலேதான் (துறைமுகம் - என்பதும் அவரது கவிதைத் தொகுப்புத்தான்) கரையேறுகிறார்கள்.

வள்ளலார், பாரதியார், பாவேந்தர் வரிசையிலே தமிழை எளிமைப்படுத்தி வலிமையூட்டிய உவமைச் சுரங்கம் நமது சுரதா அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/7&oldid=495049" இலிருந்து மீள்விக்கப்பட்டது