பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 * * நினைவு அலைகள் “பொருட்செல்வம் பெற்றவர்களிலும் சிலரே. வைரத்தைப் பார்த்துப் பாராட்டும் திறன் உடையவர்கள். “அறியாமையில் மூழ்கியுள்ள சமுதாயத்தில், அறிவு வைரங்களின் மதிப்பைத் தெரிந்து கொள்ளவில்லையே! என்று அங்கலாய்த்தால், மக்கள் அறிவும் அறிவை மதிப்பிடும் ஆற்றலும் பெற்றுவிடமாட்டார்கள். "அங்கலாய்ப்பதால், நம்மை நாமே சித்திரவதை செய்து கொள்ளுகிறோம். ஒவ்வொருவரும் உள்ள தொல்லைகளை மறந்து, ‘புல்லானால் மிகச்சிறந்த புல்லாயிருப்பேன். ஈயானால், தேனியாக இருப்பேன். நெல்லானால் மணம் வீசும் நெல்லாயிருப்பேன்’ என்று -- சூளுரைத்துக்கொண்டு, உங்கள் ஆற்றல் அனைத்தையும் பொழிந்து பணிபுரியுங்கள். பணியைத் தொழில் என்று செய்யும்போது, ஆசிரியப் . பணியில் சலிப்புத்தட்டும். குடி செய்யும் பெருந்தொண்டு என்பதை நினைவில்கொண்டு வேலை செய்தால், பணியில் பரவசம் பெறுவீர்கள். “பொதுமக்களுடைய பொறுப்பு, பிள்ளைகளை ஒழுங்காகப் பள்ளிக்கு அனுப்புவதோடு முடிந்துவிடவில்லை. "தங்கள் பிள்ளைகளை அறிவாளிகளாக, ஆற்றல் மிக்கவர்களாக, சிந்தனையில் உயர்ந்தவர்களாக, பண்பாட்டில் நிலைப்பவர்களாக உருவாக்கும் பெரும்பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியப் பெருமக்களுக்குப் போதிய பணிப் பாதுகாப்பும் வாழ்க்கைக்குப் போதிய ஊதியம்-ஒய்வு கால நன்மைகள் முதலியன கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் சமுதாயத்தின் கடமை ஆகும். "குடியானவர் பயிருக்கு நீர் பாய்ச்சுவது, வள்ளலாரை உந்திய உயிர்க் கருணையால் அல்ல; "வாடாமல் வளர்ந்தால் விளைச்சல் நிறைந்திருக்கும்’ என்னும் ஆதாய நோக்கால்தான். “ஆசிரியர்களின் நலனைப் பேணும் பொறுப்பை நாம் எடுத்துக்கொண்டு, கற்பிக்கும் கவலையை மட்டும் ஆசிரியர்களிடம் விட்டுவிடுதல், வளரும் தலைமுறைகளின் நலனுக்காகவே: நாட்டின் நலனுக்காகவே!” - என்ற பாணியில் பேசினேன்.கேட்டோர் கண்களில் ஒளியைக் கண்டேன்; மகிழ்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/120&oldid=787905" இலிருந்து மீள்விக்கப்பட்டது