பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - நினைவு அலைகள் இந்திய நிர்வாக முறை, ஆங்கிலேயர் ஆண்டபோது உருவாக்கப்பட்டது. ஆள்வோர் நலனை மட்டும் முன் நிறுத்தி உருவாக்கப்பட்டது. ஆமை வேகத்தில் நகர்வதற்காகவே வார்க்கப்பட்டது. விரைவு முடுக்கியாக இராமல், முட்டுக் கட்டையாக இருக்கவே விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதை இயக்குவோர், வேகத்தடைகளாகச் செயல்பட்டதில் வியப்பில்லை. படித்தவர்களுக்காகவும், பணக்காரர்களுக்குமாக நடந்த அன்னிய ஆட்சிக்குப் ப்ோதுமானதாகப் பயன்பட்ட நிர்வாக இயந்திரமும் முறைகளும், விரைந்தும் பரந்தும் பொதுநலத்தைப் பேண வேண்டிய இந்தக் காலத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்திய ஆட்சியாளர், அதை எப்படியோ சமாளிக்க முயன்றார்களே ஒழிய, அதைக் கலைத்துவிட்டுப் புதிய இயந்திரங்களை உருவாக்கவோ, புதிய விதிகளை இயற்றவோ போதிய கவனம் இதுவரை செலுத்தவில்லை. அய்யோ பாவம்! அவர்கள் சிந்தனை முழுவதும் தாங்கள் பெற்றுவிட்ட பதவிகளை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதற்கே செலவழிந்துவிட்டதே! நிர்வாக இயந்திரத்தின் கோளாறுகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் நினைவுக்கு வருகின்றன. அதிகாரக் குவியல், நிர்வாக அமைப்பில் உள்ள குறைகளில் ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ள அரசு அலுவலர், ஆயிரம் ருபாய் வரை அலுவலகக் கட்டடப் பழுது பார்த்தலுக்குச் செலவிடலாம். 'அதற்கு மேற்பட்ட செலவாகுமென்றால், மதிப்பீட்டை மேல்நிலை அலுவலருக்கு அனுப்பி இசைவு பெறவேண்டும் என்று ஒரு விதிமுறை கூறும். அப்படி வரம்பு வைத்த காலத்தில், கொத்தனாருக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாயும் சிற்றாளுக்குக் கால் ரூபாயுமே கூலியாக இருந்திருக்கும். கொத்தனார் கூலி அய்ந்து ரூபாயாகவும், சிற்றாள் கூலி ஒரு ரூபாயாகவும் ஆனபிறகும் செலவு அதிகாரம் பழையபடியே இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/159&oldid=787944" இலிருந்து மீள்விக்கப்பட்டது