பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. நினைவு அலைகள் அடம்பிடிப்பவன் அண்ணாமலை நகரில் இருந்து சென்னைக்குத் திரும்பியதும் இந்தத் தகவலை,நேரில் கல்வி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அவர், அதைச் சரிசெய்யத் துடித்தார். கல்விச் செயலரோடு பேசினார். "சிதம்பரம் மகளிர் உயர்நிலைப் பள்ளிக்குக் கட்டடம் கட் ஒரு லட்சம் பிடிக்கும். வரும் ஆண்டிற்கு அடையாள ஒதுக்கீடு நூறு ரூபாய் (Token Provision) செய்யலாம் என்று இயக்குநர் எனக்கு நேர்முகக் கடிதம் எழுதட்டும். "ஏற்கனவே, காலதாமதமாகி விட்டாலும் நான் நிதிச் செயலருக்கு நேர்முகக் கடிதம் எழுதி, வரவு செலவு திட்டத்தில் சேர்த்துவிடப் பார்க்கிறேன்”. இது கல்விச் செயலர், திரு. சி. எஸ் இராமச்சந்திரனின் பதில். அப்படியே நேர்முகக் கடிதம் எழுதினேன். ஒரு வாரம் சென்றது. கல்விச் செயலர் என்னை அழைத்தார். அவரைக் கோட்டையில் கண்டேன். அவர் என்னிடம் ஒரு கோப்பைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்; படித்தேன். ஏமாற்றம் கெளவிற்று. "சிதம்பரம் மகளிர் உயர்நிலைப்பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டும் திட்டம் இப்போது ஒன்பதாவது முறையாக வருகிறது. ஏற்கெனவே எட்டுமுறை தள்ளிப்போட்டதால், வானம் இடிந்து வீழ்ந்துவிடவில்லை. மேலும் ஒர் ஆண்டிற்குத் தள்ளிப் போடுவதால், பெரிய கேடு வந்துவிடாது. தள்ளிவைக்கவும். - இப்படியொரு குறிப்பு. அதை எழுதியவர் கீழ்நிலை எழுத்தர். “கொக்கி போட்டவர்கள்’ நிதித்துறையின் அத்தனை அலுவலர்களும். இதற்கு அலுவலர் படை தேவையா? பொது மக்கள் கிண்டலாகக் கூறுவதுபோல், கீழ்நிலை எழுத்தர்களே அரசை நடத்தலாமே! அந்தக் குறிப்பைப் படித்ததும் என் முகம் சிவந்தது. கல்விச் செயலர் என்னை ஊக்க முன் வந்தார். "இதை இப்படியே விடக்கூடாது. இன்றே, இதைத் தெரிந்து கொள்ளாமல், நீங்களாகவே நினைவுபடுத்துவது போல், வற்புறுத்தி எனக்கு எழுதுங்கள்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/161&oldid=787946" இலிருந்து மீள்விக்கப்பட்டது