பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகச் சீர்கேடு - 123 அதற்கு இசைந்தேன். உடனே என்னைக் கல்வி அமைச்சரிடம் அழைத்துச் சென்றார். நடந்ததைக் கூறினார். அவரது ஆலோசனையை அமைச்சர் ஆதரித்தார். நான் மீண்டும் சிதம்பரம் பள்ளிக் கட்டடம் பற்றி எழுதினேன். 'அடம் பிடிப்பவன்’ என்று கோட்டைக் கோமான்கள் எனக்கு முத்திரை குத்த இடம் கொடுத்து விட்டேன். எவ்வளவு அப்பாவித்தனம்!. ஆனால், எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டியது. வரவு செலவு திட்டத்தில் புதிய கட்டடம் சேர்க்கப்பட்டது. எங்கே கட்டுவது என்பது பற்றி ஊரின் பெரிய மனிதர்களுக்குள் கருத்து வேறுபாடு. அது காலத்தைக் கொள்ளை கொண்டது. அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, இப்போது மகளிர் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ள இடத்தில் கட்டடத்தைத் தொடங்குவதற்குள் நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அக் காலத்தில் சிதம்பரம் பெண்கள் படிக்க இடமின்றித் தவித்தனர். நிர்வாகச் சீர்கேட்டால் நிதி இழந்தோம்! மற்றொரு நிகழ்ச்சி. திருநெல்வேலி மாவட்டம் திருச்செந்துார் வட்டத்தில் உடன்குடி என்ற ஊரில் நமச்சிவாய முதலியார் என்பவர் - ஆசிரிய நிர்வாகி - உயர் தொடக்கப் பள்ளி ஒன்று நடத்தி வந்தார். பொதுமக்களைக் கொண்டு பள்ளிகளைச் சீரமைக்கும் இயக்கம் ஒன்றைத் தமிழ் மக்களிடையில் நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது ஆர்வ அலையாகத் தொடர்ந்தது. கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பொதுமக்கள் வாரி வழங்க முன் வந்தார்கள். நமச்சிவாய முதலியார், பள்ளிக்கூடத்தையும், தமது சொத்து - அப்போதைய மதிப்பீடு ஒன்றரை இலட்சம் ரூபாய் - முழுவதையும் அரசிடம் ஒப்புவித்து விடுவதற்கு முன்வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/162&oldid=787947" இலிருந்து மீள்விக்கப்பட்டது