உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நினைவு அலைகள் அலுவலர்களைப் படிக்க வைத்தேன். அவர்களோடு கலந்துரையாடி, சில ஆலோசனைகளைப் பெற்றேன். அடுத்து, மீண்டும் எடை போட்டேன். தனியார் சொல்லக் கூடியவற்றை எல்லாம் அரசு வெளியீட்டில் அப்படியே சொல்ல முடியாதே! அதையும் கருத்திற்கொண்டு இறுதியாக, நாற்பத்திரண்டினை, வெளியிடத்தக்கன என்று பொறுக்கி எடுத்தேன். பொறுக்கி எடுக்கப்பட்ட ஒவ்வொன்றையும் மறுபடியும் படித்தேன்; செழுமைப்படுத்தினேன்; எளிதாக்கினேன்; சேர்க்க வேண்டிய படங்களைக் கூட்டினேன். அவ்வப்போது நடப்பனவற்றை அமைச்சரிடம் வாய்மொழியாக அறிவித்து வந்தேன். அவர் ஆலோசனைகளின்படி நடவடிக்கை எடுத்தேன். அதே நூல்களை வெளியிட ஏற்பாடு செய்தேன். அழகிய தாளில், கண்கவரும் கட்டமைப்பில், கொட்டை எழுத்துகளில் வண்ணப்படங்களோடு நாற்பத்திரண்டும் அச்சாகி முடிந்தன. கல்வி அமைச்சரின் பாராட்டு முறைப்படி வெளியீட்டு விழா நடத்த நாள் கேட்க, கல்வி அமைச்சரை அணுகினேன். அப்போது, நாற்பத்திரண்டு நூல்களையும் கொண்டு போய், உரிய மரியாதையோடு அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். அடுத்த நாள் காலை கல்வி அமைச்சர், என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். 'உங்களுக்கு என் பாராட்டு. நேற்று காலை நீங்கள் ஒரு கட்டு நூல்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனதை என் பெண்களாகிய அருணாவும் சுதந்திராவும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். "நீங்கள் அப்படிச் சென்றதும் இருவரும் வந்து என்னிடம் இருந்த கட்டை வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். "நான்கு ஐந்து வகுப்புகளில் படிக்கும் அவர்கள் இருவரும் நாற்பத்திரண்டையும் நேற்றே படித்து முடித்தார்கள். "அவர்களுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. மேலும் இம் மாதிரி நூல்கள் வந்தால், முதலில் அவர்களிடம் கொடுக்க வேண்டுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/165&oldid=787950" இலிருந்து மீள்விக்கப்பட்டது