பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 20. காமராசர் காப்பாற்றினார் கிண்டி பொறியியற் கல்லூரி மாற்றமா? மற்றோர் சங்கடமான கேள்வியைக் கேட்டார், இராமசாமி முதலியார். “கிண்டி பொறியியற் கல்லூரியை, இந்திய அரசிடம் கொடுத்துவிடப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே! அது உண்மையா?” என்பது முதலியாரின் கேள்வி. “ஆம். இந்திய அரசு, கிண்டி கல்லூரியை மையமாகக் கொண்டு, ஒரு இந்தியத் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்’ தொடங்க எண்ணி உள்ளதாகவும், அதற்குச் சாதகமாக மாநில அரசு நடத்தி வரும் கிண்டி பொறியியற் கல்லூரியைத் தங்களிட்டம் ஒப்படைத்துவிடும்படியும் மைய அரசு கோரிற்று. இதுபற்றி அமைச்சரவை மட்டத்தில் பேசி, கொடுத்துவிட இசைந்து உள்ளோம்” என்பது கல்வி அமைச்சர் திரு. சுப்பிரமணியத்தின் பதில். இராமசாமி முதலியாரின் கருத்து “இம் முடிவு நல்லதென்று எனக்குத் தோன்றவில்லை. கிண்டி பொறியியற் கல்லூரி, உலகப் புகழ் பெற்ற பொறியியற் கல்லூரி. அதன் பட்டதாரிகளுக்கு உலகமெங்கும் ஏற்பு உண்டு. அதை இந்திய அரசிடம் கொடுத்துவிட்டால், மாநில மாணாக்கர்களுக்கு மதிப்பு உள்ள இட வாய்ப்புகள் அந்த அளவு குறைந்து போகும். = “இந்தியத் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் சென்னைக்குத் தேவை. அதைச் சென்னையிலோ அதற்கு அருகிலோ அமைக்கத் தாராளமாக நிலங்கொடுத்து உதவுங்கள். “இந்திய அரசு செலவுசெய்து, புதிதாக அந்தப் பல்கலைக் கழகத்தை அமைத்துக் கொள்ளட்டும். மைய அரசுக்கு உள்ள நிதிவசதி, மாநில அரசுக்கு ஏது? நூறு ஆண்டுகளாகச் செலவு செய்து, படிப்படியாகப் பலப்படுத்தி வந்த கிண்டி பொறியியற் கல்லூரியை மாநில அரசிடமே வைத்துக்கொள்ளப் பாருங்கள்” என்று இராமசாமி முதலியார் கூறினார். 'இந்திய அரசுக்குக் கொடுத்துவிடும்படி கல்வி அமைச்சருக்கு ஆலோசனை கூறியவர் டாக்டர் இலட்சுமணசுவாமி முதலியார்’ என்பதைக் கல்வி அமைச்சர் அம்பலப்படுத்தவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/186&oldid=787971" இலிருந்து மீள்விக்கப்பட்டது