பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் காப்பாற்றினார் 149 உங்கள் கருத்தை மதித்து, நானும் இசைகிறேன்” என்று கூறினார். அப்படியே அமைச்சரவை முடிவு செய்தது” என்று மீ.பக்தவத்சலம் குறிப்பிட்டார். ‘நான் எடுத்த நிலையொன்றும் தவறானது அல்ல’ என்று உணர்ந்து உள்ளுர மகிழ்ந்தேன். அமைச்சர் அளகேசன் அதுபற்றித் தெரிவித்த கருத்து வருமாறு: “எத்தனையோ முறை காந்தி அடிகளின் விளக்கங்களில் பொருள் இல்லை என நமக்குத் தோன்றியிருக்கிறது. எனினும் அவர் மேல் கொண்டிருந்த அளவற்ற பற்றினால், அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி உள்ளோம். அது, நம் குறிக்கோளை அடைய நமக்குப் பெரிதும் உதவிற்று. "அதேபோல்,சென்னை மாநில விவகாரங்களில் காமராசரைக் கண்ணை மூடிக் கொண்டு, பின்பற்றினால், அது சரியாக வந்து சேரும்.” இந்தக் கருத்தின்ை மீ. பக்தவத்சலனார் ஏற்றுக்கொண்டார். வி. டி. கே. உரை அடுத்தநாள் காலை, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்னை மாநில அரசின் செயலர்களும் இயக்குநர்களும் குறிப்பிட்ட இடத்தில் கூடியிருந்தோம். இந்திய அரசின் பல்துறை அலுவலர்களும் குழுமினார்கள். கூட்டம் தொடங்க இரண்டொரு மணித்துளிகள் இருக்கையில் காமராசர், மீ. பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம் ஆகிய மூவரும் வந்து சேர்ந்தனர். பிறகு, இந்தியத் திட்டக் குழுவின் துணைத்தலைவர் சர். வி. டி. கிருஷ்ணமாச்சாரியார் வந்தார். கூட்டம் தொடங்கியது. அவரது உரை, ஆங்கில ஆட்சி பாணியில் இருந்தது. “சென்னை மாநிலம் எல்லாத் திட்டங்களுக்குமாக ஒரு தொகையைக் கேட்டு இருக்கிறது. அரசின் நிதிநிலையைக் கவனித்ததில் அவ்வளவு ஒதுக்க முடியாது என்று தெரிகிறது. “மாநில அரசு எது எதற்குக் கோரிக்கையையும், செலவு களையும் குறைத்துக் கொள்ள முடியும் என்று பார்த்து, ஒவ்வொரு பிரிவின் உட்குழுவிடம் சொல்லிவிட்டால், இரு சாரார் வேலையும் எளிதாகும். அப்படிச் செய்யும்படி கோருகிறேன்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/188&oldid=787973" இலிருந்து மீள்விக்கப்பட்டது